Friday, May 10, 2013

அதுமட்டும் மறந்து விட்டது



வலிந்து
ஏற்படுத்திக்கொள்ளும் சந்திப்புகள்,
வேண்டுமென்றே
மறந்து போனதைக் கொடுக்க வந்து
பேச்சை வளர்க்கும் முயற்சிகள்,
தவறிய அழைப்புகள் கொடுத்து
மீளக்கேட்கையில்
இல்லை மேலே உனது எண்தானிருந்தது
என்று சமாளிக்கும் மன்னிப்புகள்,
வரும் வேளையை தொடர்ந்தும்
கவனித்து
திரும்பிச் செல்லும் நேரத்தை
சரிசெய்து கொள்தல்,
இதுநாள் வரை பெயரெடுத்தாலே
பிடிக்காதிருந்த விஷயங்களைப்பற்றி
இணையத்தில் விடாது தரவுகள் சேகரித்தல்,
தாமே தமக்குள் யோசித்துவைத்து
அவையாவும் பொருந்திப் போகும்போது
மறைக்க எத்தனிக்கும் புருவ உயரல்கள்,

இவையெல்லாவற்றிற்கும்
ஒரு பெயர் இருக்கிறது
அதுமட்டும் மறந்து விட்டது.


Monday, May 6, 2013

ஆனந்தயாழ் - தங்க மீன்கள்



'கற்றது தமிழ்' போலவே வரிகளுக்கும் ராகத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து அத்தனை பாடல்களிலும், பின்னணி இசை அடக்கியே வாசிக்கிறது. தெரியாத இசைக்கருவிகள் கொண்டு இசைக்காது எப்போதும் வழமை போல இருக்கும் சாதாரண கருவிகள் கொண்டே இசைக்கப்பட்டிருக்கிறது. மெல்ல இறங்கும் விஷம் போல தன்னையறியாமல் எனக்குள்ளே இறங்கிக் கொண்டிருக்கிறது. உள்ளுக்குள்ளே ஊறிப்போய் வழியும்போது புறங்கையை கொஞ்சம் சுவைத்துப்பார்க்கவே தோணும் தேன் குடித்தவன் நிலையில் இப்போது நான், இது ஒரு புதிய அவதாரம் யுவனுக்கு. ‘கற்றது தமிழ்’, ‘பருத்திவீரன்’, ‘ஆரண்ய காண்டம்’, ‘7ஜி ரெயின்போ காலனி’ வரிசையில் யுவனின் இந்த மீன்கள் என்றும் நீந்தும் நம் மனதில்.

பாசத்தை இசையில் வெளிப்படுத்துவது என்பது கத்தி மேல் நடப்பது போன்று. காதலன்/காதலிக்கென இசைக்கும் அதே வயலின் அம்மா/மகனுக்கும், அப்பா/மகளுக்குமான பாசத்தை அதற்கான ரசம் கொண்டு இசைக்கவில்லையெனில் கேட்பவன் மனதில் வேறு மாதிரியான எண்ணங்களுக்கு விரைவில் இடம் கொடுத்துவிடும். அடிப்படையில் எல்லாம் அன்பே என்ற போதிலும், சமூக மாற்றங்களுக்கு உட்பட்டு, விலங்கினத்திலிருந்து பரிணாம வளர்ச்சி கொண்டு மேலே வந்திருக்கும் மனிதனுக்கு ஒரு சிறு கம்பியிழை வேறுபாட்டில் மீண்டும் தவறி அங்கேயே வீழ்ந்துவிட வாய்ப்பு வெகுவாக இருக்கிறது. அதை வெளிக்காட்டி விட இசைக்கருவிகளின் வாசிப்பு போதும்.!


ஒரு பாடல் என்பது நம்மை அழுந்தச்செய்து, எழுந்து போக விடாமல், தொடர்ந்தும் கேட்க வைத்து உள்ளுக்குள் மனதுள் பலபடிகள் அடிவரை சென்று தங்கும் விஷயமாக வாய்ப்பது என்பது ஒரு சில பாடல்களுக்கு மட்டுமே. அதற்குப்பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

முதன் முதலில் அதை எந்த இடத்தில் வைத்துக் கேட்டோம், யாரோடு சேர்ந்திருக்கையில் அது கேட்டோம், எந்த மாதிரியான சூழலில் அதை நம்மைத்தேடி வந்ததது என்பன போன்ற பல விஷயங்களை உள்ளடக்கி ஒரு பாடல் நம் நெஞ்சில் பதிந்து போகிறது. முன்முடிவுகளுடன் ஒரு பாடலை அணுகாது, அதுவாகவே வந்து நம்மைக்கொள்ளை கொண்டு போகும் பாடல்கள் மிகவும் அரிது. எண்ணிச் சொல்லிவிட முடியும் அது போன்ற பாடல்களை. யாருமில்லாத தீவுக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட முடிவு செய்தால் எந்தெந்தப் பாடல்களை எடுத்துக் கொண்டு போவாய் என்று கேட்டால் பத்தோ பதினைந்தோ பாடல்களை அனைவரும் பட்டியல் போட்டுவிடுவர்,

அது போன்ற பட்டியலில் இடம்பெறக்கூடிய பாடல்களில் தமதும் சேர்ந்து விடவேண்டுமென்று அத்தனை இசையமைப்பாளரும் விரும்புவர். முகவும் வலிந்து ஏகப்பட்ட சங்கதிகளைச் சேர்த்து இதுவரை யாரும் செய்யாத முயற்சிகளில் பாடலை உருவாக்கி வெளிக்கொணர்ந்தால் அது அத்தனை எளிதில் சேர்ந்து விடுவதில்லை கேட்பவரிடம், போகிறபோக்கில் இசைத்து விட்டுப்போகும் அவரறியாமல் வந்து விழும் பாடல்கள் என்றுமாக நம் நெஞ்சில் தங்கிப்போய்விடும். இசைப்பவனின் மனதும், ரசனையும் கேட்பவருடன் ஒத்துப் போகும்போது பாடல் அழியாப்புகழ் பெறுகிறது. அத்தகைய பெறுபேறு பெற எத்தனித்த இசைக் கோவைகளுள் ஒன்று இந்தத் ‘தங்கமீன்கள்..!’ வழக்கம் போல அதிகம் பாடல்கள் இல்லை என்ற குறை தவிர வேறேதும் தோன்றவில்லை எனக்கு.

ஒவ்வொரு பாடலின் தொடக்கத்திலும் இயக்குநர் 'ராம்' வந்து சின்ன ஹைக்கூக்களை நம்மிடம் சொல்லிச் செல்வது முதலில் கொஞ்சம் இடைஞ்சலாகத் தோன்றினாலும் (80-களில் இந்தப்பாணி நடப்பில் இருந்து பின்னர் தாமாகவே வழக்கொழிந்து போனது) பின்னர் பழகிப்போகிறது, அவரின் உச்சரிப்பில் ஏகத்துக்குப் பிழையிருப்பினும் :)



ஆனந்தயாழை மீட்டுகிறாய் - தமிழ்த்தாலாட்டு

“மாமன் அடித்தானோ மல்லிகைப் பூச்செண்டாலே” என்று தாலாட்டாக ஆரம்பிக்கிறது ஆனந்தயாழ். அம்மா நமக்கெனப் பாடியிருந்தும், நம்மால் அதை ஞாபகம் வைத்திருக்க முடிவதில்லை இருப்பினும், அந்தப்பாட்டு நமக்குள் உறைந்து போய்க்கிடக்கும் எப்போதும். அப்படிக் கிடக்கும் ஒன்று இன்று யுவனால் மீளக்கொணர்ந்து சேர்க்கப்பட்டிருக்கிறது நம்மிடம்.‘தேனே தென்பாண்டி மீனே’ மற்றும் ‘வரம் தந்த சாமிக்கி பதமான லாலி‘க்குப் பிறகு அப்பா மகளுக்குப் பாடும் தாலாட்டாக வந்திருக்கும் பாடல் இது.

‘அக்கார்டியனை’ வைத்துக்கொண்டு பரவி நிற்கும் அதன் கருப்பு வெள்ளைக்கட்டைகளை மெதுவே அழுத்தி ஆரம்பிக்கிறது பாடல். தாளமே தேவையில்லை என்று முடிவெடுத்து , ராகத்துக்குப் பொருத்தமாக சிறிதே பின்னணியில் ‘சிம்பல்’ கொண்டு இசைத்து தாலாட்டு உறங்க வைக்கத்தான் என்று அறுதியிட்டுக் கூறுகிறார் யுவன் ! (இந்தப்பாடல் முழுக்க முழுக்க ராஜாவின் ‘டச்’ தெரிகிறது.)

இடையிசையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் செல்லோ’வும் பியானோவும் இணைந்து ராஜபாட்டை போடுகிறது. ஒரு தாலாட்டு என்றால்,‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பதுபோல,அவன் எந்த நிலையில் இருப்பினும் அவனவனுக்கு அவனவன் மகள் இளவரசி தான் , ஒரு ராஜா தன் மகள் இளவரசிக்கு பாடுவது/இசைப்பது போல அத்தனை 'ரிச்’சாக அமைந்திருக்கிறது. தாலாட்டும் ஒரு ஸிம்ஃபொனியாகவே ஒலிக்கிறது இங்கு.

யாருக்குத்தான் தாலாட்டு பிடிக்காது ? ஹ்ம்,, எத்தனை முறை கேட்டாலும் அலுத்து, சலித்துப் போகாத ராகமும், இசையமைப்பும் , ஸ்ரீராம் பார்த்தசாரதியின் குரலுமாக (‘இளங்காத்து வீசுதே’வுக்குப்பிறகு சொல்லிக் கொள்ளும்படியாக) விலகிச் செல்ல விடாது அப்படியே கட்டிப்போடும் வகையாக அமைந்திருக்கிறது பாடல். வெய்யில் காலத்தில் வேப்ப மரங்களூடே பயணித்து வரும் இளந்தென்றலைப் போல வருடிச்செல்லும் பாடல் இது. யுவன் இந்தப்படத்தின் பாடல்களை தம் இதயத்திலிருந்து கொண்டு வந்ததாகச் சொல்லியிருந்தார். ஹ்ம்..அது சென்று சேரும் இடத்தைத்தான் அடைந்திருக்கிறது. என்ன ஒன்று கேட்டதும் உறங்கிவிடாமல் இருக்கவேண்டும் :)

பாடல் முடியும்போது, அதுவரை தொட்டிலை ஆட்டிக்கொண்டே தாலாட்டுப் பாடிக்கொண்டிருந்த தாய், அவள் பாட்டிலும், சுற்றிவரும் காற்றிலுமாக உறங்கிவிட்ட குழந்தையை, தாலாட்டைச் சற்று நிறுத்தி விட்டு தொட்டில் சேலையை நீக்கி, “உறங்கிவிட்டானா” என்று பார்த்துவிட்டு மெலிதே மீண்டும் தொடர்வாள். அதுபோல ஸ்ரீராம் பார்த்தசாரதி ‘ஆனந்தயாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில்’ என்று சொல்லி விட்டு அங்கு கொஞ்சம் இடைவெளி விட்டு ‘வண்ணம் தீட்டுகிறாய்’ என்று மெதுவாக முடிக்கிறார்.!


நதி வெள்ளம் - நீர்ச்சுழி

நதியின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் கற்களில், தேங்கிக் கிடக்கும் கற்களில் நீர் அடிபட்டு வெளிப்படும் சப்தம் நிறைந்து கிடக்கிறது பாடல் முழுக்க. ‘ராகுல் நம்பியாருக்கு’ சொல்லிக் கொள்ளும் படியான ஒரு பாடல் அவரது குரல் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, ”பறபறவென” என்ற நீர்ப்பறவைப் பாடலுக்குப் பிறகு. யூகிக்க முடியாத இசைக்கோவையில் இசைக்கும் அழுத்தமான கிட்டார் தந்திகள் ஆரம்பத்திலும், இடை இசையாகவும் ஒலித்து நம்மை மீள விடாமற் செய்கிறது இதயத்துடிப்பை அடி நாதமாகக்கொண்டு பாடல் இசைக்கிறது.

1:01 ல் ஆரம்பிக்கும் பின்னணியில் அந்த மணி போன்ற ஒலி, அதிகமாக சீனப்பாடல்களில் இசைக்கப் படுவது. கூர்ந்து கவனித்தால் புலப்படும் அந்த மணிகள். நமது மேயப்போகும் மாடுகளுக்கென, கோவில் மணி போலல்லாது வேறு வகையான மணி கட்டிவிடுவது வழக்கம்.ஓரளவு அதுபோல இசைக்கிறது.நம் கவனத்தை திசை திருப்பவியலாது தொடர்ந்தும் பின்னணியில் ஒலிக்கிறது.

1:49 ல் ஆரம்பிக்கும் வயலினும் வேய்ங்குழலுமான சேர்ந்திசை ஆர்ப்பாட்டமின்றி ஆரம்பித்து தவழ்ந்து சென்று இதய வானெங்கும் பரவி, அன்பை அத்தனை இடங்களுக்கும் அறிமுகப்படுத்திவிட்டு வரிகளுக்கு வழி விட்டு நின்றுபோகிறது.

3:27 ல் ஆரம்பிக்கும் புல்லாங்குழல், இதயத்தின் சுவர்களில் புதைந்து, வெளிக்காட்ட விருப்பின்றி உள்ளுக்குள்ளேயே அமிழ்ந்துகிடக்கும் பாசத்தை வெளிக்கொணர எத்தனித்து ,‘எதற்கு இதையெல்லாம் பூட்டி வைத்திருக்கிறாய், எடுத்து வெளியே விடு, மனது இலகுவாகட்டும் என்று கூறுவது போல’, அதிர்ந்து ஒலிக்காது, நம்மைக் கூர்ந்து கவனிக்கச் செய்கிறது.

இடையிசை எப்போது ஆரம்பிக்கிறது , எப்போது முடிகிறது என்று வழக்கமாக கவனிப்பது போல இந்தப்பாடலில் என்னால் கவனம் செலுத்த இயலவில்லை. வேண்டும்போது தானாக எழுந்து ராகுல் நம்பியாரின் குரலை கொஞ்சமே பின்னுக்குத்தள்ளி முன்வந்து விட்டு பின்னர் தாமாகவே சென்று பின் மறைந்து விடுகிறது. இந்தப்பாடலைக் கேட்பதற்கென மனநிலையைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற அவசியமில்லை, தாமாகவே உங்களை உள்ளிழுத்துக்கொள்ளும் இந்தப்பாடல்.




யாருக்கும் தோழனில்லை –சூஃபி

சுரைக்குடுக்கையில் கம்பிகளைக் கட்டிக்கொண்டு வாயிலில் வந்து அவ்வப்போது ஃபக்கீர்கள் பாடிச் செல்வது போல பாடல் அமைந்திருக்கிறது. நிறைய சூஃபி கலந்து ஒலிக்கிறது பாடல். பின்னணியில் பாடிக்கொண்டே செல்லும் அந்தக்குரல் இதயத்தை அறுக்கிறது. முதலிலும் இடையிடையேயும் ஒலிக்கும் மாண்டலின்/கிட்டார் கொஞ்சம் “போகாதே”வை ஞாபகப்படுத்தினாலும் பாடல் செல்லச்செல்ல மறைந்துபோகிறது. அடிஸ்கேல் போன்று நீளமாக குச்சிகளில் சோடா டப்பிகளை பொருத்தி வைத்துக் கொண்டு இரண்டு கைகளாலும் சப்ளாக்கட்டைகளை இசைப்பது போல எங்கும் ஒலிக்கிறது பாடல் முழுக்க. என்ன ஒரு குறை என்றால் “ஏன் இந்தப்பாடல் இரண்டு சரணங்கள் மூன்று முறை பல்லவி என ஒலிக்காமல் சுருக்கென முடிந்து விடுகிறதே” என்பது மட்டுமே.! இப்படியான இலக்கணங்களை விரும்பாத ஃபக்கீர்கள் தான் இந்தப்பாடலை இசைக்கிறார்கள் என்ற கட்டுடைப்பு செய்யும் முயற்சியில் பாடல் அமைந்திருக்கிறது.

நுஸ்ரத் ஃபத்தே அலிகானின் பல பாடல்கள் இது போன்ற Genre களில் ஒலிக்கும். இன்னும் பின்னால் போய்ப்பார்த்தால் “லம்பி ஜுதாயி” மற்றும் ‘லக்கி அலி’யின் ‘ஓ சனம்‘, ‘Desert Rose’ கூட சொல்லலாம். விட்டேற்றியாய் அலைந்து திரியும் மனநிலையில் பின்னணியில் ஒலித்தால் நன்றாக இருக்குமே என்று நம்மைக் கூறு போட்டு விட்டு போகும் பாடல்கள் இந்த ரகத்தைச்சேர்ந்தவை. இதே போல ஒரு பாடல் “கற்றது தமிழிலும்” ‘உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது’ என்று ஒலித்திருந்தது. ( ட்யூட்டரின் பாடலை ஒத்திருந்த அந்த ஜென் பாடல். ( http://youtu.be/JQdztRg_7nY - Deuter - Second Stage)

இங்கு சூஃபி’ இசையுடன் கொஞ்சம் அளவோடு ஜென்’னும் கலந்து ஒலிக்கிறது.அதிகமாக சூஃபி இசை வடிவத்தில் காணக்கிடைக்கும் போக்கில்லாது அலைபவனின் “அரற்றல்”கள் 1:55 லிருந்து ஆரம்பித்து அதைக்கொண்டே பாடலை முடிக்கிறார் அல்ஃபோன்ஸ் ஜோஸப். குரல் புதிதாக அமைந்திருப்பது இந்தப்பாடலுக்கு ஒரு கூடுதல் சிறப்பு.

ஃபர்ஸ்ட் லாஸ்ட்

முதலில் கூறிய அத்தனை பாடல்களும் அழுத்தம் நிறைந்து கனத்துப் போய்க் கிடக்க இந்தப்பாடல் அவற்றிலிருந்து விடுபட்டு கொஞ்சம் “ஃப்ரீயா விடு” Genre-ல் ஒலிக்கிறது.



Monday, April 29, 2013

அப்பாவின் ரேடியோ – சுஜாதா தேசிகன்





எல்லோருக்கும் பிடித்தசுஜாதா பின்னர் எல்லோருக்கும் பிடித்த அவரது தேசிகன் மற்றும் நேசமிகு ராஜகுமாரன் (என்ன அருமையான பெயர் :) ), மணிகண்டன், ரா.விநோத்பின்னர் ஞானுமாக எல்லாருமாச்சேர்ந்து கப்பன் பூங்காவில் ஒரு மூலையில் உட்கார்ந்துபேசிக்கொண்டிருந்தோம் நேற்று  28 ஏப்ரல்2013,  மங்கிய மாலைப்பொழுது , வெய்யில் முற்றுமாகத்தணிந்து குளிர்ந்துகிடந்தது புல்தரை. வழக்கம் போல வட்டமாக அமர்ந்துபேசத்தொடங்கினோம். எனக்கு கொஞ்சம் வந்து சேர்வதற்கு நேரமாகிவிட்டது. ஆச்சரியம் 6-7பேர்களே வந்திருந்த கூட்டம் ஆரம்பித்தேவிட்டது. கடைசியாக நானும் சேர்ந்துகொள்ளஅறிமுக சுற்றுக்குப்பின் , ராஜகுமாரன் “ஃபோட்டோ” எடுத்துருங்க , பின்னர்ஆரம்பிக்கலாம் என்றார்.

ஃபோட்டோ சுற்று முடிந்து,அறிமுகச்சுற்று ஆரம்பித்தது. ரா.விநோத் நிறையப்பேசினார். அரசியல் செய்திகள்சேகரிப்பது பற்றி , உலகின் அழகிய , அவருக்கு மிகவும் பிடித்த நடிகையுடன் காரில் பெங்களூரிலிருந்து மைசூர் வரை பயணித்து ( பேட்டிக்காகத்தான் சாமி :) ) அளவளாவியதைப்பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார்.எங்க விட்டால் இவரது பேச்சிலேயே கூட்டம் முடிந்துவிடுமோ என்று நினைக்குமளவிற்கு.பின்னர் அவரவர் அறிமுகம் நடந்தேறியது. திருஜி மிகவும் குறைப்பட்டுக்கொண்டார் ,தேசிகன் மிகக்குறைவாகவே எழுதுவதாக. மணியும் சேர்ந்து பேசினார். ராஜேஷ் தொடர்ந்து சுற்றிசுற்றி  (அஞ்சு பேர எத்தன ஃபோட்டோதான் எடுக்கிறது ?! )போட்டோ எடுத்துக்கொண்டேயிருந்தார்.

நூல் வெளியிடப்பட்டது ,ராஜகுமாரன் வழங்க வினோத் பெற்றுக் கொண்டார். நேசமிகு ராஜகுமாரன் ஏற்கனவே எழுதி வைத்துக்கொண்டு வந்திருந்த உரையைப் படிக்கத்தொடங்கினார்.  தமக்கு சிங்கப்பூரில் ஒரு இதுபோன்ற ஒரு விழாவில்கலந்துகொள்ள இருந்தது கடைசி நேரத்தில் தள்ளிப்போடப்பட்டது பற்றி சொன்னார். பின்னர்நிறைய சிறுகதைகளைப் பற்றிசிலாகித்துப்பேசினார். பூபி,பாபி ,வின்னி போன்ற கதைகள்பற்றி குறிப்பாக விவாதித்தார். அப்பாவின் ரேடியோ’ கதையைப்பற்றிக் குறிப்பிடுகையில், அவரின் கிராமத்திலேயே தமது வீட்டில் மட்டுமே முதன்முறையாக ரேடியோ வந்ததையும், முதல்மின்சார சுடுகாடு வந்து அதில் தம் அன்னையை கொணர்ந்து சேர்த்ததையும் , அதுபற்றியஒரு சிறுகதை ஆனந்தவிகடனில் வெளிவந்து அனைவரின் பாராட்டுகளைப் பெற்றதையும்பகிர்ந்துகொண்டார். மேலும் தேசிகனின் தொகுப்பு சிறுகதைகளும், கட்டுரைகளுமாகப் பின்னிக்கிடப்பதைச்  சுட்டிக் காட்டினார். பின்னர் விழா நாயகனைப்பேச அனைவரும் கேட்டுக்கொண்டனர். எல்லோரும் பேசி முடிக்கட்டும் அணிந்துரையாக எனது இருக்கட்டும்என்று கூறிவிட்டு , விநோத்தை பேசப்பணித்தார்.



விநோத் எல்லோரையும் போல , ‘இப்போதெல்லாம்நான் சிறுகதைகள் வாசிப்பதேயில்லை’ , இந்தத் தொகுப்பு என்னை வாசிக்கத் தூண்டிவிட்டதுஎன்று ஆரம்பித்து , வின்னி என்ற சிறுகதையைப்பற்றி தமது ஆரம்ப பள்ளிக்காலஅனுபவங்களுடன் ஒப்பிட்டு பேசத் தொடங்கினார், வெகு சுவாரசியமாக இருந்தது அவர்பேச்சு. “ராகவன் ராகபன்” என்ற கதையில் வரும் பாத்திரப்பெயர்களை சொல்லி ரசித்துக் கொண்டதாக பேசிக் கொண்டிருந்தார். இருப்பினும் கூட்டம் குறைவாகவே இருந்ததால் பேசுவதற்குஅனைவர்க்கும் வெகு நேரம் கிடைத்தது. திருஜி இன்னும் தொகுப்பை வாசிக்கவில்லை என்றுநான் நினைத்ததையே சொன்னார்.

என் பங்குக்கு ,இப்போதெல்லாம் சிறுகதை வாசிப்பு குறைந்துவிட்டது. அதனால் கவிதை (?) எழுதத் தொடங்கிவிட்டகதையை ராஜகுமாரனிடம் சொன்னேன். அப்ப்டியெல்லாம் ஒன்றுமில்லை , வாசிக்க நினைப்பவர் தேடிப்பிடித்து வாசிக்கத்தான் செய்கின்றனர், நீங்க விகடனுக்கு எழுதி அனுப்புங்கஎன்று கூறினார்   ( உடனே வந்துவிடும் :) :) )

கடைசியாக தேசிகன் பேசத்தொடங்கினார்.கதை எழுதியதை விட அவர் எங்கனம் சுஜாதாவிடம் ஒரு கதையை எழுதிக்கொண்டுபோய் காண்பித்தகதையை விலாவாரியாக ரசித்துச் சொல்லிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட எட்டு வாரங்கள், ஒவ்வொரு வாரமும் கதையைத்திருத்தி திருத்தி எழுதிக்கொண்டு போய் ஆசானிடம்காண்பித்த ‘காதையை’ப் பற்றி சிலாகித்துக்கூறினார். எட்டுப்பக்கங்களை ஐந்துபக்கங்களாக்கு , முதல் பாராவும் கடைசிப்பாராவும் அருமை , இடையில் எல்லாவற்றையும் மாற்றிவிடு, அந்தப்பையனை ரொம்ப நோஞ்சானாகக்காட்ட முயற்சி செய், ப்ரிண்டவுட்எடுத்துக்கொண்டுவா , திரும்பத்திரும்ப வரும் சொற்களை நீக்கு , இப்படியான கட்டளைகளை சிரமேற்கொண்டு ,விடாமுயற்சியுடன் உருப்பெற்ற அந்தக்கதை, ஒரிஜினல் கதையை விடசிறப்பாக இருந்தது :). அதை அவர் சொல்லியவிதமும்அருமை.




‘பிச்சை’ என்றகதைக்குத் தலைப்பை ‘பிச்சைப்பாத்திரம்’ என்றே வைத்திருந்ததாகவும் பின்னர் விகடனில்அது ‘பிச்சை’யாக மாற்றப்பட்டதையும் கூறினார். தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தஓருவரின் பின்னணியில் அந்த ‘நான் கடவுள்’ படத்தின் பாடல் எழுதத்தூண்டியதாகசொன்னார்.இப்படி ஒவ்வொரு கதையுமே எதோவொரு சம்பவத்தின் உந்துதலாக, அல்லது தமதுவாழ்வில் முன்னரே நடந்த விஷயங்கள் தம்மை எழுதத் தூண்டியதாகவுமே கூறிக்கொண்டிருந்தார். “இரண்டு மணி நேரத்தில் ஒரு சிறுகதை எழுதிக்குடுங்க’ என்றுசொன்னால் தன்னால் எழுதவே இயலாது என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஆசானுடன் பயணித்தகாலங்களைப்பற்றிய அவர் அனுபவங்கள் , கதைகளை எங்கனம் எழுதுவது என்று அவர் கொடுத்த அறிவுரைகள் ..ஹ்ம்...நமக்குத்தான் அந்தக்கொடுப்பினை இல்லை :(.. எல்லாமாகச் சேர்ந்து ஒரு புதுவித அனுபவமாகஎனக்கு வாய்த்தது.

தேசிகன்  எப்போது எழுதத்தொடங்கினார், எவையெல்லாம், எதெல்லாம்அவரை எழுதத்தூண்டியது என்ற விஷயங்கள் வெகு சுவாரசியமாக இருந்தன. வீட்டிலிருக்கும்சிறு குழந்தைகள் , பெரியவர்கள் செய்யும் எல்லாச்செயலையும்! தாமும் செய்து பார்க்கஎத்தனிப்பது போல, அம்மா சமையல் செய்தால் தாமும் செய்ய முயற்சிப்பது , அப்பா பைக்ஓட்டினால் தாமும் ஓட்டிப்பார்க்க நினைப்பது போன்றே , சுஜாதா எழுதுகிறார் அதுபோலவே நானும்சிறுகதை, கட்டுரை எழுத முயற்சிக்கிறேன் என்று கூறியது ரசிக்கும்படி இருந்தது.

பின்னர் ஒவ்விரு கதையும்எவ்வாறு கதையாக உருவெடுத்தது என்ற கதையை சொல்லிக் கொண்டிருந்தார். அவரது கதையில்வரும் பாத்திரங்கள் எல்லோரும் எதோ ஒரு காலத்தில் தேசிகனுடன் பயணித்தவர்களாகவேஇருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொஞ்சம் நாஸ்ட்டால்ஜியா கலந்த குறிப்புகளாகவேகதைகள் அனைத்தும் இருக்கும் என்றே நினைக்கிறேன். இன்னும் தொகுப்பை வாசிக்கவில்லை ,வாசித்த பின்னர் ஒரு விமர்சனக்கட்டுரை எழுதலாமென்றிருக்கிறேன்.

விவாதிக்க மேலும்விஷயங்களில்லை என்ற அந்த மங்கிப்போன மாலைப் பொழுதில் பின்னர் இன்னொரு கூட்டத்தில்சந்திக்கலாம் என்று நேசகுமாரனும், தேசிகனும் விடை பெற்றுச்சென்ற பின் , மணி, நான், விநோத் ,மற்றும் ராஜேஷ் எல்லாருமாச்சேர்ந்து அப்போது எடுத்த புகைப்படங்களைபார்த்துக் கொண்டிருந்தோம். இனி வரும் கூட்டங்களை எங்கு நடத்துவது , யாரை அழைப்பதுஎன்று பேச்சு வேறு திசை நோக்கிச்சென்றது. எல்லாம் முடிந்த பின்னர் சிவகுரு, மணியின் பைக்கில் அமர்ந்து கொண்டு கையசைத்து விடை பெற்றுச்சென்றார். நானும் திருஜியும் கொஞ்சம் காலார நடந்துகொண்டு கூட்டம் பற்றி அசை போட்டுக்கொண்டே சென்றோம்.. :)

ஞாயிற்றுக்கிழமைமாலை கூட்டம் சேராதது ஒரு குறை, பின்னரும் சனிக்கிழமை நடைபெற இருந்த கூட்டம்ஞாயிற்றுக்கிழமையாக மாற்றப்பட்டதும் ஒரு காரணம்.ஹோசூர் கோஷ்ட்டி வராமற் போனதும் குழு சிறுத்துப்போனதற்கு ஒரு பெரிய காரணம்...இப்படி பல காரணங்கள்..! :) கூட்டம் அதிகமில்லாமற் போனாலும் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் நல்ல அனுபவங்களாகவே அமைந்தது.

.

.

Thursday, April 25, 2013

புகைப்படம்



என் கல்லூரி நாட்களின்
புகைப்படங்களை வைத்து
ஒவ்வொன்றாகப்
பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.


‘அம்மா இது யாரும்மா ?’

‘இது, அப்ப இது ?’

ஒவ்வொருவராகச் சொல்லிக்கொண்டே
வந்தேன் நான்


‘அம்மா இது யாரும்மா’
என்ற கேள்வி அங்கேயே
தொக்கி நின்றது


‘என்னம்மா மறந்துபோச்சா’
என்ற கேள்விக்கு
‘அது மட்டும் மறக்கவேயில்லை’
என்று கூற
ஏனோ எனக்குத் தோணவில்லை


 .

Saturday, April 20, 2013

பொதிவு



இப்போதெல்லாம் அதனைப்
பிறர் முன்னிலையில்
எடுத்துக் கொள்ள
நாணப்படத் தேவையில்லை
குளியலறைப் பொருட்களோடு
அவையும் அடுக்கித்தான்
வைக்கப்பட்டிருக்கின்றன
அலங்கார விளக்குகளோடு

எனினும் அந்தக்கடைக்காரன்
பில் போட்டவுடன்
கருத்த பிளாஸ்டிக் பையில்
தனியாகப் பொதிந்து
கொடுப்பது மட்டுந்தான்
என்னை என்னவோ செய்கிறது.





.

Monday, April 15, 2013

கேள்



காற்றின் கரங்களைக் கேட்கலாமென்றால்
அது கரைந்து செல்லவே எத்தனிக்கிறது

ஃபீனிக்ஸின் இறகுகளைக்கேட்கலாமென்றால்
முழுதும் எரிந்தபின்னரே அவை கிடைக்குமெனத் தெரிகிறது.

சாதகப்பறவையைக் கேட்கலாமென்றால்
பெருமழை வேண்டிக்காத்துக்கிடக்கச் சொல்கிறது

அன்னப்பறவையைக் கேட்கலாமென்றால்
நீரிலிருந்து பிரித்தெடுக்கும் வரை காத்திருக்கச் சொல்கிறது

மானின் விழிகளைக்கேட்கலாமென்றால்
அதன் மருட்சியில் மனமே துவண்டு கிடைக்கிறது

உன் மனத்தைக் கேட்கலாமென்றால்
அது நொடிக்கொருதரம் மாறிக்கொண்டேயிருக்கிறது


.

Wednesday, April 10, 2013

மாயை




எந்த மனநிலையிலிருப்பினும்
ஒரு பாடல் என்னைத் திசை திருப்பிவிடுகிறது,
இன்று எவ்வளவு விட்டேற்றியாயிருப்பினும்
ஒரு கவிதை எனக்கு புன்முறுவலைத் தந்துவிடுகிறது,
எதுவுமே வேண்டாம் என்று சூன்யமாயிருப்பினும்
வெகு உயரே பறக்கும் ஒரு பறவை
என்னை அவதானிக்கவைத்துவிடுகிறது,
மனம் போன போக்கில்
எங்கு சென்றாலும் எதோ ஒன்று
என் அனுமதியின்றி நடந்து கொண்டுதானிருக்கிறது.


இப்படியாகவே இருக்கும்
என்னைத்தொடர்ந்தும்
உற்றுநோக்கி கவனித்துக் கொண்டிருப்பவனுக்கு
ஒரு காட்சியாகவே
எப்போதும் நான்
இருந்துகொண்டுதானிருக்கிறேன்.