Wednesday, March 1, 2017

கோக்'கை உறிஞ்சும் வண்ணத்துப்பூச்சிகள்


பாலசுப்ரமணியன் பொன்ராஜ் எழுதிய 'துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை' என்ற சிறுகதைத்தொகுப்பிற்கு ,  கணையாழி 'ஃபெப்ரவரி 2017' இதழில் வெளியான எனது நூல் விமர்சனக்கட்டுரை




ஸ்ரீனி என்னுடன் தொலைபேசியில் உரையாடும் போது உற்சாகமாக ஒன்றைச் சொன்னார். இலக்கியக் கூட்டங்கள் தொடர்ந்தும் நடத்துவது பற்றி பேசிக் கொண்டிருக்கையில், பாலா (பாலசுப்ரமணியன் பொன்ராஜ் ) எழுதின ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பல்’ கதைகள் ஒரு பிரதியை உங்களிடம் கொடுக்கச்சொல்லி அதற்கு விமர்சனமும் எழுதச்சொன்னார் என பேருவகையுடன் சொன்னார். இப்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன். நிறைய சிறுகதைகள், குறுங்கதைகள் சற்றே நீண்ட சிறுகதைகள் எனப்பலவகைகளில் தரம் பிரிக்கக்கூடிய வகையில்.. எனக்கென்னவோ இவரின் மொழி எக்கச்சக்கமான உவமைகளோடேயே பிறந்தது போலிருக்கிறது .இவ்வளவு உவமைகள் நான் எங்கும் வாசித்ததேயில்லை. எல்லாமே அந்நியமாகவே இருக்கிறது. இது காறும் தமிழில் வாசித்த உவமைகளைப் போலன்றி புதுப்பாங்கு எங்கும் காணப்படுகிறது.

நான் சிறுவனாக இருந்தபோது முன்னேற்றப்பதிப்பகம்’ (இப்பவும் இருக்கிறதா என்று தெரியவில்லை) ரஷ்யமூல நூல்களை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடுவார்கள் குறைந்தவிலையில் அப்படி ஒரு நூல் ‘பாறைச்சூறாவளித் துறைமுகம்’ என்ற சிறுகதை தொகுப்பு. விண்வெளி வேற்றுக் கிரக வாசிகள் , அவர்கள் தம் கதைகள், என அப்போது எனக்கு எதுவும் தெரியாத வயதில் வாசித்தவை. பிரமிப்பு எப்போதும் அடங்காது எனக்கு. பத்து வயதில் வேற்றுக்கிரகம், காலப்பயணங்கள் பற்றிய கதைகள் அதுவும் பரமக்குடி பொட்டல்காட்டில் இருந்துகொண்டு அத்தகைய ஸ்பேஸ் ஃபேண்ட்டஸிக்களை வாசிப்பதென்பது என்னைப் பொருத்தவரை விவரிக்கவியலாத புளகாங்கிதங்களே.. இன்றைக்கும் அதில் இருந்த சில கதைகளை என்னால் நினைவு கூர இயலும்.

அதே போன்ற மொழி, உவமை சொல்லும் பாங்கு, எளிதில் விளக்கவியலாத இருமுறை மும்முறை வாசித்தே புரிந்துகொள்ள வேண்டியவை என சிறுகதைத் தொகுப்பெங்கும் வியாபித்துக்கிடக்கிறது. ஒவ்வொரு உவமையும் கமாவுடன் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. சலிக்கவில்லை. ஆயிரம் கவிதைகள் உருவாக்கலாம் போலிருக்கிறது எனக்கு.

ஒவ்வொரு சிறுகதையாக மெல்ல மெல்லவே என்னால் வாசிக்கமுடிந்தது. பெரும்பாலும் பயணங்களிலேயே வாசிக்கும் பழக்கம் எனக்கு. வெளியிலிருப்பதை விட உள்ளில் கையிலிருப்பது சில சமயம் மிகவும் சுவாரசியமாக இருந்துவிடும். அது போன்ற ஒரு புத்தகம் தான் இந்த துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை. ஆமாம் இதற்கு இப்படி ஒரு அமங்கலப்பெயர்.? எழுத்தாளனின் எழுத்தும், அவனின் தலைப்புகளும் அவனது உரிமை. பால் தாக்கரே 'பம்பாய்' படம் வெளியான போது அதை 'மும்பை' என்று மாற்ற வேணும் என்று அடம்பிடித்தார். அவரும் துரதிர்ஷ்டத்தால் அரசியல்வாதி ஆனவர். நல்ல கார்ட்டூன் வரைக்கலைஞர்.சரி அதை விடலாம்.

எல்லாச்சிறுகதைகளுமே வேறேதோ மொழியில் எழுதப்பட்டு பின்னர் அதை தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது போலவே ஒவ்வொரு கதை வாசிக்கும்போதும் எனக்குத்தோன்றுகிறது. எனினும் தமிழ் இலக்கண விதிகளுக்குட்பட்டு வாக்கிய அமைப்புகளும், உவமைச் சொல்லாடல்களும் , நிறுத்தற் குறிகளும் சரியான இடத்திலேயே அமர்ந்திருக்கின்றன. மொழி மாற்றக்கதைகளில் அங்கனம் எதிர்பார்ப்பது கடினம். மேலும் உவமைகள்/சொல்லாடல்கள் பிற மொழியில் (Idioms and Phrases ) சொல்வதை அப்படியே மொழி பெயர்த்தால் மத்தியான வேளையில் ஏசி இல்லாத தியேட்டரில் அமர்ந்து கொண்டு விருப்பமில்லாத திரைப்படத்தை பார்ப்பது போன்ற உணர்வையே தரும். எகா'வுக்கு ஒன்று சொல்கிறேன் 'ஏக் தாம் தோ காம்' என்ற சொலவடை இந்தியில் உண்டு அதை தமிழில் மொழி பெயர்க்கும் போது எல்லோரும் செய்யும் தவறு 'ஒரு விலை இரண்டு வேலை' என்பது அதையே தமிழ்ப்பாங்கில் மொழி பெயர்க்கும்போது 'ஒரு கல்லில் இரண்டு மாங்காய்' என்பதே சரி. இப்படியான மொழிபெயர்ப்புகளையே என்னால் காண முடிகிறது. நன்றி பாலா. ஆதலால் கிட்டத் தட்ட எல்லாச்சிறுகதைகளிலுமே என்னால் ஒன்றிப்போய்விட முடிகிறது.

'நாளை இறந்து போன நாய்' இந்தச்சிறுகதை வாசிக்கும்போது எனக்கு ஜூடி ஃபாஸ்ட்டர் நடித்த ஒரு ஆங்கில திரைப்படம் தான் ஞாபகத்துக்கு வந்தது. அதில் எதிரி , தலைவியும் அவளது இறந்து போன கணவனும் ஒரு சிறு பிள்ளையுமாக பயணிக்கும் விமானத்தைக்கடத்த எண்ணி , சாமர்த்தியமாக காய் நகர்த்தி விமானத்தை ஜூடியே கடத்துவது போல எல்லொருக்கும் அறியச்செய்வான். அதற்கென அவளை மிரட்ட அந்தச்சிறுபிள்ளையை கடத்தி வைத்துக்கொண்டு தன் வேலையைச்செய்து தொடர்ந்து கொண்டிருப்பான். அப்போது விமானத்திலேயே ஒரு மனநல மருத்துவரும் பயணம் செய்வார். இந்தச்சிறுபிள்ளை அவளுடன் விமானம் ஏறுகையில் தம்முடன் கூட வரவேயில்லை என்று அவளை நம்ப வைக்க அவளுடன் உரையாடி அது முழுதுமே உன்னுடைய இல்லூஷன் என நம்பச்செய்வார். அவளோ சாதிப்பாள் நான் என்னுடன் என் மகளை கூட்டி வந்தேன் என்று. இதுவும் அந்த எதிரியின் வேலைதான் அவள் அதை அறிய மாட்டாள்.

அப்படி ஒரு கதை இந்த நாய்ச்சிறுகதை, இந்தக்கதையில் தலைவனிடம் ஒரு நாய் இருந்தது என்ன காரணத்தினாலோ அது இறந்து விட்டது (தலைவன் தான் அதைக்கொன்றானா என்ற சந்தேகம் நமக்குள் எப்போதும் எழாமல் பார்த்துக் கொள்கிறார் ஆசிரியர்) அவன் சந்திக்கும் ஒவ்வொருவரும் அந்த நாயைப்பற்றிக் கேட்பார்கள். 'எத்தனை முறை சொல்வது நான் . நாயே வளர்க்கவில்லை என்று' என மன்றாடுகிறான். யாரும் அவன் சொல்வதை கேட்பதில்லை. நாயின் பிடரி மயிர் படிந்த சங்கிலியையும் வார்ப்பட்டியையும் பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்து விட்டுச்செல்வார். முனிசிபாலிட்டி அதிகாரிகள் அவன் வீடு தேடி வந்து விசாரிப்பர். தலைவனுடன் படுக்கையைப்பகிர்ந்துகொள்ளும் தோழி கூட அதைப்பற்றி விவாதிப்பாள். இவனோ சாதிப்பதை நிறுத்த மாட்டான். அப்படி ஒரு வஸ்து/ஜீவன் தன்னுடன் உயிரும் சதையுமாக பழகி வந்தது , தன்னுடன் உணவையும் நீரையும் பகிர்ந்துகொண்டது என்பதை மறைக்க, மறக்க அவன் அத்தனை சாதிக்கிறான். இருப்பினும் அவனது மனவலிமையை பாராட்டத்தான் வேண்டும். புதுஎழுத்து மனோன்மணி பேசிக்கொண்டிருக்கையில் இப்படி சொல்வார். 'போர் நடந்து கொண்டிருக்கும்போது நான் பூக்களைப்பற்றி எழுதுவேன் என.' தாகூர் கூட துணைக்கண்டம் முழுக்க விடுதலையைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது கீதாஞ்சலி எழுதினார்.

இன்னுமொரு திரைப்படம் கூட எனக்கு ஞாபகம் வருகிறது. 'As Good as it gets' ( இதற்கு என்னுடைய மொழிபெயர்ப்பு ' உள்ளங்கை நெல்லிக்கனி' ) அதில் யாருடனும் ஒட்டி உறவாடாது, தானுண்டு தன் பணியுண்டு என கூச்ச சுபாவம் உள்ள, யாரும் எப்போதும் தன்னை ஒருக்காலும் காயப்படுத்தி விடக்கூடாது என எண்ணும் 'successive multiple disorder' எனும் வியாதியுள்ள தலைவன் வசிக்கும் அதே அப்பார்ட்மென்ட்டில் ஒரு ஒவியனும் வசிப்பான். வரைந்து வரைந்து விற்காத நிலையில் ,அவனது காலரி ஒருநாள் எதிர்பாரா தாக்குதலில் இடர்ப்பட இனியும் தொடர்ந்து உணவிட்டு வளர்க்க இயலாது என்றெண்ணி ஒரு சிறு நாயை யாரிடமாவது கொடுத்து விடலாம் என எண்ணும்போது நமது தலைவன் அகப்படுவான் ஏனெனில் அவனிடம் தான் அவனைத்தவிர யாரும் கூட இல்லவே இல்லையே , அதனால்... ஆனாலும் அதை அத்தனை எளிதில் ஏற்றுக்கொள்ளத்தயங்கி தயங்கி பின்னர் ஒரு வழியாக சம்மதித்து வாங்கிக்கொள்வான். ஒரு நாள் அந்த நாய் எங்கோ சென்றுவிடும். அதைத்தாங்கிக்கொள்ள முடியாது வீட்டிலிருக்கும் பியானோவை இசைத்துக்கொண்டே 'just a small dog' என்று கண்ணீர் உகுப்பான். எல்லோரும் அன்புக்கு ஏங்குபவர்கள் தான். அதே தான் இங்கும், சரி செத்துப்போய்விட்டது என்ன செய்வது , நான் அப்படி ஒரு ஜந்துவை வளர்க்கவே இல்லை என்று இறுமாப்புடன் யாரும் தம்மை சீண்டிவிடப்போகிறார்களோ , இரக்கப்பார்வை கொண்டு தம்மைக்கூறு போட்டுவிடுவார்களோவென உள்ளுக்குள் மருகிப்போகிறான் தலைவன், எக்காரணம் கொண்டும் யாரிடமும் தோற்றுப்போய்விடக்கூடாது என்றெண்ணும் சிலரின் உளப்பாங்கு இக்கதை

'பன்னிரண்டு மரணங்களின் துயர் நிரம்பிய தொகுப்பேடு' ஜேஜே'யின் சில குறிப்புகளைப்போல , அங்கு ஒரு பத்தி இல்லையெனில் ஒரு நான்கு வரிகள் மீறிப்போனால் பத்துவரிகளுக்குள் அடங்கிவிடும் குறிப்புகள் , இங்கு ஒவ்வொரு குறிப்புகளும் ஒவ்வொரு பத்திகள். கல்லெறிந்து வீழ்த்திய குருவி' எங்கனம் வீழ்ந்தது , என்றெண்ணி அவன் குற்ற உணர்வில் துடித்துப்போவான் என்கிறார் ஆசிரியர், வேடன் என்றாவது துடிப்பானா ? ஹ்ம். வேணுமெனில் தம் கண்ணிக்குச்சிக்காத பறவையை எண்ணி எண்ணி கண்ணீர் உகுப்பானாயிருக்கும். ஒரு மனிதனைக் கொல்வது இதயத்தையும் சேர்த்தே கொல்லும் , எனினும் வைஸி வெர்ஸா Vice Versa புதிது. கொஞ்சம் துரோகமும் தேவைப்படும். இது போன்ற வரிகள் வாசகனை அவனுள் இருக்கும் எழுத்தாளனை இன்னமும் எழுதத்தூண்டுபவை.

ஜங்க்' எனும் சிறுகதை , தொகுப்புகளிலேயே மிகச்சிறந்த ஒன்று , இதையே கூட இந்த நூலுக்கு தலைப்பாக வைத்திருக்கலாம். தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் தமிழ் புதினங்கள் வாசிப்பவராயிருந்தால் இப்படி ஒரு தலைப்பில் நூலை வாங்க மாட்டார்கள் என்றெண்ணி வைத்திருக்கமாட்டார் என்றெண்ணுகிறேன். ஹ்ஹ்ஹாஹா...பெரும்பாலும் கதைகள் நடக்கும் களம் பெங்களூராகவே இருக்கிறது அதுவே இன்னும் எனக்கு நெருக்கமாக இருப்பதாக உணர்கிறேன். பழகிய தெருக்கள், அலைந்த இடங்கள் , உட்கார்ந்து பேசிக்கழித்த பொழுதுகள் என அந்த ஒரு சொந்த உணர்வு தொகுப்பெங்கும் உணரமுடிவது ஒரு சிறப்பு. என்ன சொன்னாலும் நம்மூர்க்கதை மாதிரி வருமா என்பதும் கூடுதல் நெருக்கம் தருகிறது. இந்தக்கதையில் ஓரிடத்தில் ஆங்கிலத்தில் சில வாக்கியங்கள் இடம் பெறுகின்றன. தொடராக.. அதிலொன்று எனக்குப்பிடித்தது " Even the Cloud is become technical and the service needs to be paid” இப்போது எனது பணி முழுதும் இந்த தொநு'வைச்சார்ந்தே இருப்பதால் இன்னமும் நெருக்கமாக உணர்கிறேன்.

அத்தனை கணினி வசதிகளும் இப்போது நாம் அனுபவிப்பவை எல்லாம் "மேகத்துக்குள்" சென்றுவிட்டது . மின்னஞ்சலாகட்டும், சேமித்து வைக்கும் கோப்புகளாகட்டும், கரை கடந்த வணிகமாகட்டும், திரை கடலோடி திரவியம் தேடவும் இந்த மேகங்கள் மட்டுமே உதவுகின்றன இனியும் இவையே ஆட்சி செய்யும். அத்தனையும் மேகங்களின் கட்டுப்பாட்டில் ஆஹா..கேட்கவே எத்தனை சுகமாயிருக்கிறது ?! ஒரு கவிஞனுக்கு இதை விட என்ன உற்சாகம் இருந்து விட முடியும் ?! எனினும் மேகத்தைப்பயன்படுத்த கட்டணம் செலுத்த வேணும் என்பது எத்தனை கொடுமை , என் கனவுகளுக்கு என்னிடம் காசு கேட்பது போலல்லவா இருக்கிறது ?

இந்தச்சிறுகதையில் 'மின்கித்தார்' என்ற பதத்தை ஆசிரியர் பயன்படுத்துகிறார். எப்போதும் எலெட்ரிக்கிட்டார் என்றே கூறிப்பழகிய எனக்கு இந்தப்பதம் ஒரு அதிர்வைத்தந்தது. நானும் கித்தார் வாசிப்பவன் என்ற உணர்வில் அந்த அதிர்வு சற்று மிகையாகவே இருந்தது என்பதே உண்மை. இந்த மின் கித்தாரை ஒருமுறை வாசித்துவிட்டால் இனிப்பழையபடி இயல்பில் ஒலி எழுப்பும் மரத்தாலான சாதாரண கித்தார்களைத் தொட மனம் மறுக்கும். எனில் அத்தகைய இனிமையான ஒலிகளும், தொடரும் இசைக்குறிப்புகளை (Sustaining Notes களை) லகுவில் வாசிப்பதும் இவ்வகை மின்கித்தார்களின் சிறப்பு.

புதிதாக எழுதவேணும் என்பது பெரிய விஷயமல்ல. தேய்வழக்குகளைத்தவிர்த்தாலே போதுமானது என அ.முத்துலிங்கம் ஐயா கூறுவார். அதுபோல இங்கு தேய்வழக்குகள் எதுவும் இல்லை. அத்தனையும் இதுவரை வாசித்த உவமைகள் இல்லை. “ஆற்றின் குறுக்காக படுத்துக்கொள்ளும் திமிங்கிலம், வாளேந்திய ஈசல்கள்,நிலத்தடியில் நகரும் நட்சத்திரக்கூட்டம்,கடலுக்கடியில் தண்டவாளம் அமைக்கும் மீன்கள், ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஏலியன்கள்" இப்படி சர்ரியலிஸக்காட்சிகள் விரவிக்கிடக்கின்றன. ஜங்க்'கில். " ஒரு சிக்கன் லெக்பீஸின் அளவிற்கோ, போர்னோக்ராஃபியைப்போன்றோ கடவுள் அத்தனை சுவாரசியமானவரில்லை" ஜங்க் கதைக்கு மகுடம் வைக்கும் வரி.

தந்திகள்' சற்றே பெரிய சிறுகதை. நெடுங்கதை. அதில் சில இடங்களில் A தந்தி போல் ஒலிக்கிறது அவள் குரல் என்ற பதம் அடிக்கடி வருகிறது. கித்தாரில் இந்த A தந்தி கொஞ்சம் சிறப்பு வாய்ந்தது. G தந்திக்கும் Major E தந்திக்கும் இடையிலான தந்தி. அடிச்சுரமாக ஒலிக்கும் இது நல்ல ஷார்ப் குறிப்புகளை ஜி தந்தியில் வாசிக்கலாம். மணி ஒலிப்பது போல , மேலேயுள்ள மேஜர் ஈ தந்தி தொண்டை கட்டிக்கொண்டு குளிர்கால நாட்களில், இல்லையெனில் இரவில் பியரை ஐஸ்கட்டி துண்டுகளை போட்டு மிதமிஞ்சிக்குடித்து விட்டு காலை எழுந்து பேச எத்தனிக்கும்போது ஒலிக்கும் நம் குரல் போன்றது இந்த Major E தந்தி , இவையிரண்டுக்கும் இடையில் அமர்ந்திருப்பது தான் இந்த A தந்தி. அதிக மென்மை/கீச்சுக்குரல் போலல்லாது அதே சமயம் கட்டிய தொண்டையின் கடினக்குரலும் போலல்லாது இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு ஒலி. அது அவளின் குரலாயிருந்தது என்பது சிலிர்க்கும் செய்தி.

இது எதோ விக்கிப்பீடியாவில் பார்த்து பின்னர் எழுதியதைப்போலல்லாது தாமே வாசிக்கக்கூடிய கலைஞராகவும் இருப்பார் ஆசிரியர் என்றே தோன்றுகிறது எனக்கு. அதே குரல் மறுமுறை ஒலிக்கும்போது A அதிர்ந்தது என்றே குறிப்பிடுகிறார் ஆசிரியர் , இது சுஜாதா'வின் பாணி. ஏற்கனவே வேண்டுமளவு விளக்கி விட்ட ஒரு பொருளை மீண்டும் மெகா சீரியல் போல சொல்லிச்சொல்லி சொய்வாக்காது தேவையானதை மீள ஒலிக்கச்செய்தல் சுஜாதா.

இந்த தந்திக்கதையில் "John Denver” Anne's Song என்ற பாடலைக்குறிப்பிட்டு சொல்கிறார். கொஞ்சம் கிறிஸ்மஸ் கரொல்களைப்போன்ற ஒரு பாடல் கேட்பதற்கு இனிமையானது. எனினும் தொகுப்பின் எந்தப்பக்கத்திலும் ஒரு தமிழ்ப்பாடலைக்கூட குறிப்பிட்டு சொல்லாதது எனக்கு வருத்தமே.

"வலை" சிறுகதை ஒரு மேஜிக்கல் ரியலிஸம் என்றுதான் கூற வேணும். இந்தப்பதத்தை நான் சரியாகத்தான் அறிந்து வைத்திருக்கிறேனா என்பது இனி நான் எழுதுவதைப் பொறுத்தே அமையும். இந்தக்கதை ஒரு சிறுமியின் பார்வையிலிருந்து எழுதப்பட்டிருக்கிறது. ஒரு புத்தகம் வாசிக்கிறாள் அது மிகவும் புதிர் அடங்கிய புத்தகம். அவளுக்கு காய்ச்சல் நாளில் எங்கும் அலையாமல் உள்ளுக்குள் இருந்து வாசிக்கட்டும் என அவளின் பெற்றோர் வாங்கிக்கொடுத்த புத்தகம் அது. சிலந்தி, புலி மற்றும் ஜெசியா எனும் மீன் இவற்றை சுற்றியே நகரும் கதை. எனக்குத்தெரிந்து இது போன்ற கதைகளை நான் திரைப்படமாகவே பார்த்ததுண்டு. ஜூமான்ஜி மற்றும் அலிஸ் இன் வொன்டர்லேன்ட். எத்தனை முறை பார்த்தாலும் என்னுள் இருக்கும் சின்னப்பயலை எப்போதும் வெளிக்கொண்டுவந்து விடும் படம் அலிஸ். ஏகத்துக்கு உயரமாக வளர்ந்து கிடக்கும் அவளை மீண்டும் தங்கள் உருவத்துக்கு கொண்டு வர ஒரு கஷாயம் தயாரிப்பாள் ஒருத்தி. அந்தக்காட்சி என் மனதில் இன்றும் அகலாது. பல வித மூலிகைகள் கொண்டு பின்னர் தன் வாயால் கொஞ்சம் உமிழ்ந்து , அதை முறைப்படியான அளவுகளோடு தயாரித்து பருகக்கொடுப்பாள் அலிஸ் அதைப்பருகியதும் சாதாராண உருவத்துக்கு மீண்டு வருவாள்.

வெள்ளை அரசியும் கருப்பு அரசியும் தமக்கைகள் இருவருக்கும் இடையிலான பதவிப்போட்டி. இப்படியாக கதை ஓடும். ஒரு வெள்ளைப்பன்றியை தம் காலிருக்கையாக பாவிப்பாள் அந்த கருப்பு அரசி. கோபம் வரும்போது ஒரு எத்து விட்டு எழுந்து போவாள். எல்லாம் புதிதாகவே இருக்கும் எனக்கு எப்போதும். இரண்டு மினியன்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக்கொண்டே அலைவர். கண்களை விட்டு அகலாத காட்சிகள் அத்தனையும். எல்லாம் வொன்டர்லேன்ட் என்ற இடத்தில் நடப்பவையாகவே காண்பிக்கப்படும். தமக்கு திருமணம் நடக்கவிருக்கும் வேளையில் ஒரு புதரினுள் விழுந்து வொன்டர்லேன்டில் எழுவாள் அந்த அலீஸ். நமக்கும் இந்தப்புத்தகத்துக்குள் போவது போல ஒன்று நடந்தால் எத்தனை சுவாரசியமாக இருக்கும்.? இப்போது மலையாளத்தில் வெளிவந்த 'சார்லி' படத்தைக்கூட அவ்வகையில் சேர்க்கலாம். கார்ட்டூனில்ருந்து புறப்பட்டு எழுந்து வருவர் அத்தனை கதா பாத்திரங்களும்.

அப்படிப்பட்ட ஒரு கதை இந்த சிலந்தி வலை. ஜூமான்ஜி' என்பது ஒரு ஓஜா போர்டு போன்ற ஒரு விளையாட்டு. அதில் விளையாடுபவர்கள் அந்தந்த இடங்களுக்கே/ காலங்களுக்கே பயணித்துப் போய் விளையாட்டை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். புலி சிங்கம் கரடி காடு எல்லாம் வரும். இங்கும் வருகிறது. கதை சிறு பிள்ளைக்கானதாக இருந்த போதிலும் எடர்னிட்டி' பற்றிய தரவுகள் அதைப்பற்றிய விளக்கங்கள் அத்தனையும் எடர்னிட்டி தான். காலத்தால் அழியாதவை. மரணமின்மை மற்றும் பிறப்பின்மை இதற்கு என்ன பதம் பயன்படுத்துவது? ஒரு சொல்லில் சொல்லவேணும் ,,என்னால் இயலவில்லை. பொம்மை ஆனையை உண்மை ஆனையென நம்பி ஏமாந்து செல்லும் சாதாரணர்களைப்போலவே நானும் நிற்கிறேன்.

நார்னியா'வின் கதையில் ஒரு மரத்தாலான பீரோவைத்திறந்து சிறுவர்கள் பயணிப்பர். அது போல ஒரு புத்தகத்துள் நுழைந்து இங்கும் பயணிக்கிறாள் சிறுமி. மரணத்தைக்கொன்றுவிடத்துடிக்கும் புத்தன் போலானேன் இந்தக்கதையை வாசித்த பிறகு. புலி எல்லா மிருகங்களையும் வதைக்கிறது கொன்று தின்கிறது அல்லது கடித்துத்துன்புறுத்துகிறது, என் அம்மா நேஷனல் ஜியாக்ரபி சேனலில் சிங்கங்கள் அடிப்பதும் கொல்வதும் , விரட்டி பயமுறுத்துவதுமாகவே அலைவதைக்காட்டுவர். என்னிடம் கேட்பாள் 'இந்த சிங்கத்தை யார்றா கொல்வா' என்று. எனக்கும் பதில் தெரியாது.

சில புத்தகங்கள் நான் வாங்கியிருக்கிறேன், சிறு வயதில் , அந்தப்புத்தகங்களில் எழுத்தும் படமும் இருக்கும். சிறுவர்களுக்கானது. அதிலென்ன ஆச்சரியம் என்றால் , அரண்மனை இருக்கிறது என்றால் புத்தகத்தின் அந்தப்பக்கத்தை விரித்தால் அரண்மனை உள்ளிருந்து இருபுறமுமாக எழுந்து விரிந்து நிற்கும். கடினமான காகிதங்களால் அப்படி வெட்டி வைத்து செய்து வைத்திருப்பர். அடுத்த பக்கத்தை திருப்பினால் அரசனும் அரசியும் முன் வந்து அரியணையில் அமர்வர் , அவர்கள் அருகில் காவலாளிகள் ஏந்திய வாளோடு என்னை நோக்கி வருவர். அற்புதங்கள் . திரும்ப மூடிவிட்டால் அரண்மனை புத்தகத்துக்குள்ளேயே ஒளிந்து கொள்ளும். இப்போதெல்லாம் அப்படியான புத்தகங்கள் இருக்கின்றனவா எனத்தெரியவில்லை என்னைப்பொருத்தவரை அப்போது எனக்கு அம்மாதிரியான புத்தகங்களே மேஜிக்கல் ரியலிஸங்கள். எனினும் 3டி தொழில் நுட்பத்தில் ஐ'பாடிலேயே களித்துக் கொள்கின்றனர் இக்காலச்சிறுவர்கள்.

கால இடைவெளி அசலையும் நகலையும் பிரித்துக்காண்பிக்காதா? காப்பி பேஸ்ட் காலத்தில் அசலேது நகலேது? எங்கிருந்து காப்பி எதிலிருந்து காப்பி எப்படி பேஸ்ட் , ரிஷிமூலம் காணப்புறப்பட்டால் இக்கதையில் வருபவர்களைப்போல நானும் பல கதைகள் சொல்லவேண்டிவரும்.

'உடைந்து போன ஒரு பூர்ஷ்வா கனவு' இந்தக்கதை இந்தச்சிறுகதைத்தொகுப்பில் ஒட்டாது தனியாக நிற்கிறது. இது இங்கு சேர்க்கப்பட்டிருக்கவேண்டிய கதை இல்லை. ( கதை என்பதற்கான தமிழ்ச்சொல் இருக்கிறதா ? ஹ்ம்.. 'கதா' என்ற வடமொழி மூலம்) சாதாரண சிறுகதை. இதை இங்கு சேர்த்திருக்க வேண்டியதில்லை.ராசைய்யா இப்படித்தான் (இங்கயும் ராசைய்யா வந்துட்டார்:)) “வளையோசை கலகலவென" எனப்பின்னர் வரிகள் சேர்க்கப்பட்ட பாடலை முழு இசைக்கோவையாக இசைத்து வைத்திருந்தார். அதன் இசைப்பாங்கு, அமைத்தவிதம் எல்லாம் செவ்வியல் பாணியின்றி எளிதில் வாசித்து உணர்ந்துவிடக்கூடியதாக அமைந்துவிட்டது. அப்போது “How To name it” இசைக் கோவைக்கென பணிகள் நடந்து கொண்டிருந்தது. அந்த செவ்வியல் இசைப்பாணிக் கோவையின் உள்ளில் அடக்கவியலாத இந்த 'எளிமையான 'வளையோசை'யை எங்கு ஒலிக்க விடுவது/சேர்ப்பது என்றெண்ணிய போது கமல் எனது படத்தில் பயன்படுத்திக்கொள்கிறேன் என்றார்.

அது போல ஒரு உயர்ந்த தரமுள்ள நூலின் பல சிறுகதைகளுக்கிடையில் இந்த சாதாரணம் உட்கார மறுக்கிறது. அனுபவித்து வயிறு முழுக்க உண்ட பிறகு மது அருந்துதல் போல அத்தனை உவக்கவில்லை இந்தச்சிறுகதை. இதே போல இன்னொரு சிறுகதையும் இருக்கிறது , உடற்பயிற்சி நிலையத்தில் சில மனிதர்கள் என. இதையும் அதே பொருந்தா லிஸ்ட்டில் சேர்க்க எனக்கு தயக்கம் ஏதும் இல்லை. வலுவிழந்த முடிச்சு,வெகு எளிதில் முடிவை கண்டறிந்துவிடும் ரகசியமின்மை, எதிர்பாரா திருப்பங்கள் என ஏதும் இல்லாமை எல்லாமாகச்சேர்ந்து பக்கத்தை நிறைக்கிறது. கப்பலின் கதையையும் என்னால் சகித்துக்கொள்ள இயலவில்லை. நான்கிற்கு இரண்டு பழுது.

எல்லாவற்றிலும் சிறப்பாக நூலெங்கும் எழுத்துப்பிழைகளே இல்லை. பிழைகளையே இலக்கணமாக கொண்டலையும் காலத்தில் இப்படி ஒரு நூல் , அட்சர சுத்தமாக வெளிவந்திருப்பது மகிழ்ச்சியே. இதிலும் ஏகத்துக்கு அரசியல் புகுந்து விளையாடுகிறது. சொக்கனைக்கேட்டால் கதை கதையாகச் சொல்வார்.

நூல் : துரதிர்ஷடம் பிடித்த கப்பலின் கதை
ஆசிரியர் : பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
வெளியீடு : யாவரும் பதிப்பகம்






Saturday, January 28, 2017

காஃபி வித் ஏலியன்ஸ் - Arrival(2016)


ஓவியம்,ஒலி அல்லது இசை, பின்னர் மொழி. இதுதான் வரிசை. இந்த மொழியை மட்டும் பிடித்துக்கொண்டு நாம் தொங்கிக் கொண்டிருக்கிறோம்.  தமிழ் எழுத்துகளே முதலில் சித்திர எழுத்துகளாகத்தான் தொடங்கியது என்றும் காலப்போக்கில் அது பலவித மாற்றங்களுக்கு உட்பட்டு, அந்நிய படையெடுப்புகள், பிறமொழிக் கலப்பு,எழுத்து வடிவங்களில் மாற்றங்கள் என்று சிதைந்து இப்போது உள்ள இந்த வட்டெழுத்துகளில் வந்து நிற்கிறது. ஆயிரம் சொற்கள் கொண்டு ஒரு கானகத்தைப்பற்றி  எழுத அக்கானகத்திலுள்ள பதினாயிரம் மரங்களை வெட்டி காகிதம் உருவாக்கி பின்னர் எழுதுவதைக்காட்டிலும் வண்ணம் கொண்டு தீட்டி விட்டுச்சென்று விடமுடியும். சொற்களை விடவும் ஆழமாகப்பதியும்  ஒரு வயலினைக்கொடு உன் அழகை வாசித்துக் காண்பிக்கிறேன் என்பது யாவரும் அறிந்த ஒன்று. கேட்போர்/பார்ப்போர் மனதில். கலாச்சாரம், பண்பாடு கடந்து நிற்கும் இசையும் ஓவியங்களும். ஓவியமும் இசையும் நல்ல ஊடகங்கள் , இதைத்தான் சொல்கிறேன் கேள் என அதிகாரத்தோரணையின்றி கேட்பவன்/ பார்ப்பவன் மனத்தில் கலைஞனைக்காட்டிலும் இன்னமும் ஊற்றெடுக்க வைக்கும் ஊடகங்கள்.

இன்னமும் சைனாக்காரர்கள் நமது பழைய எழுத்துகளான சித்திர எழுத்துகளையே பயன்படுத்துகின்றனர். அதையே நாமும் தொடர்ந்திருக்கலாம். உணர்வுகளை அடுத்தவனுக்கு தெரிவிக்க வேணும், நாம் நினைப்பதை பிறர் புரிந்து கொள்ள வேணும், என்பது பழைய கால பேச்சுக்களற்ற சார்லி சாப்ளின் படங்களின் மூலம் அத்தனை தெளிவாக புலப்படும் நமக்கு. சைகைகளின் மூலம் விளக்கி சொல்தல் என்பது கூட மனிதர்களுக்கிடையே மட்டுமே செல்லு படியாகக்கூடிய தொடர்பு ஊடகம். பறவைகளுக்கோ இல்லை மிருகங்களுக்கு அங்கனம் புரிய வைக்க இயலாது. சங்கேத மொழிகளும் குழூஊக்குறிகளும் மனிதர்களுக்கிடையேயான இன்னொரு ஊடகமே. இதை வைத்துக்கொண்டும் இன்னபிற விலங்குகள் பறவைகளுடன் உரையாடிவிட இயலாது.

இந்தத்திரைப்படத்திலும் அன்னியர்கள் ( ஏலியன்ஸ்) வேற்றுகிரக வாசிகள் ஓவியத்தையே தமது ஊடகமாக மனிதர்களுடன் தகவல் தெரிவிக்க பயன்படுத்துகின்றனர். இருப்பினும் அவற்றை புரிந்து கொள்தல் என்பது எவெரெஸ்ட் ஏறும் முயற்சியாகிறது. இன்னமும் கற்கால மனிதனின் பாறை ஓவியங்களைப்புரிந்து கொள்ள நம்மால் இயலவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு புரிதலுடன் அதை மொழியில் விளக்க முயற்சிக்கின்றனர்.  இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பூமிக்கு வந்துபோய்க் கொண்டிருக்கும் ஏலியன்ஸ் கிட்டத்தட்ட ஐம்பது அறுபது வகைகள் என்பது புலனாகியிருக்கிறது. அத்தனை பேருடனும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள இயலவில்லை நம்மால். பெரும்பாலும் பூச்சியினத்திலிருந்து உருவான அதி உயர் மனித இனம் தான் அவை. நாமோ முதல் குரங்கு. டினோஸார்களை அந்த விண்கல் மோதி அழித்திருக்காவிடில் டினோசாரின் பரிணாம வளர்ச்சியில் மனிதன் தோன்றியிருப்பான்.



ஒரு எகா. கடலில் வசிக்கும் ஆக்டபஸ் ஒரு ஏலியன். எட்டுக்கைகளும் மூன்று இதயங்களும் கொண்ட ஒரு உயிரினம். மிகுந்த அறிவுடையவை , அதனால் காற்பந்து போட்டிகளில் இவற்றின் ஆரூடம் உலகப்புகழ் பெற்றது, மிகக்குறுகிய காலமே வாழக்கூடியவை. உலகில்/கடலில் எந்த உயிரினமும் இங்கனம் உடற்கூறு கொண்டதில்லை. ஜெல்லி மீன்களுக்கு இதயமோ/மூளையோ இல்லை. மேலும் ஜெல்லிகளுக்கு இயற்கை இறப்பே இல்லை. இதெல்லாம் மிகவும் ஆச்சரியத்துக்குரிய விஷயங்கள். இவையெல்லாம் பூமியில் இருந்து உருவான உயிரினங்களே இல்லை என அடித்துக்கூறலாம். இந்த திரைப்படத்தில் காண்பிக்கப்படும் ஏலியன்ஸும் கிட்டத்தட்ட ஏழெட்டுக்கால்களை/ கைகளைக் கொண்டுள்ளன. எனினும் வழக்கமாக சுவாரசியத்துக்காக காண்பிக்கப்படும் ஏமாற்று வித்தைகளோ அவற்றை வைத்து மாயாஜாலம் காட்டவோ முயலவில்லை.

நிறைய கேள்விகள் அரசாங்கத்துக்கு எதற்காக அவர்கள் இங்கே வந்திருக்கின்றனர்? அவர்களுக்கு என்ன தேவை ? சுற்றிப்பார்க்க வருவதானால் ஒரு விண்வெளிக்கப்பல் மட்டும் போதுமே , எதற்கு பன்னிரண்டு கப்பல்கள் உலகெங்கும் அத்தனை சிறப்பற்ற இடங்களில் தொங்கிக்கொண்டு இருக்கவேணும் ? ஆம் அவை தரை பாவாது பத்தடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டே நிற்கின்றன. நதியில் ஓடாதிருக்கும் பரிசல்கள் கரையில் சார்த்தி வைத்திருப்பதைப்போல அவை அந்தரத்தில் சார்த்தி வைக்கப்பட்டுள்ளன. எவ்வித புகையோ இல்லை , கழிவுப்பொருட்களோ வெளியில் சிந்துவதில்லை. அத்தனை கப்பல்களும் தமக்கிடையே தகவல் பரிமாற்றங்களை அதீத உயர் ஒலிக்குறியீடுகளில் நிகழ்த்திக்கொள்கின்றன. அந்தப்பரிசல் விண்கப்பலினுள்ளே ஈர்ப்பு விசை மிகவும் குறைவு. தேவையான ஆக்ஸிஜன் இருக்கிறது.மூச்சுமுட்டல் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு என அறிய வருகிறது

உள்ளிருக்கும் அந்த ஏலியன்ஸை ஹெப்டா பாட்ஸ் -ஏழு காலிகள் -ஏழு கால்களைக்கொண்டவை (எட்டுக்காலிகள் அல்ல ) என அழைக்கலாம். அவர்களின் கப்பல்கள் உலகில் இடி/மின்னல் அதிகம் நிகழாத இடங்களாகப் பார்த்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பதினெட்டு மணி நேரங்களிலும் அவர்களின் கதவுகள் திறக்கின்றன. மனிதர்களுடன் பேசி அவர்களின் வருகைக்கான காரணங்களை அறியத்தர. அவர்களின் ஓவிய மொழி,ஒலியை அடிப்படையாகக்கொண்டதல்ல நமதைப்போல. சித்திரங்களை, படங்களை அடிப்படையாகக் கொண்டு விளக்க முயற்சிப்பவை. ஓராயிரம் சொற்களில்/ஒலிகளில் சொல்லவேண்டியதை ஒரு சிறு படத்தின் மூலம் விளக்க முயற்சிக்கும் ஓவியங்கள். சிக்கலானவை , ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை, ஒன்று போல் ஒன்று இருப்பதில்லை,  உயிர், மெய் என்ற பாகுபாடில்லாதவை. மிகப்பெரிய சவாலாக இருக்கிறது தலைவிக்கு. முன்னும் பின்னும் எழுதப்படும் ஒலிக்குறிப்புகள் அடங்கிய மனித மொழி அல்ல அது. இசைக்குறிப்புகளைப்போல சுருங்கச்சொல்லி விளங்க வைப்பவை. அதனால்தான் இசை பிரபஞ்ச மொழி என அழைக்கப்படுகிறது.




ஒரு வரியை எழுத வேண்டுமானால் எத்தனை சொற்கள், எவ்வளவு இடைவெளிகள், அது பதிலா இல்லை கேள்வியா , இல்லை மெதுவே கடந்து போகக்கூடிய வெறும் சொற்களா ? இத்தனை நமது மனதில் ஓடி பின்னர் எழுதத்தொடங்குகிறோம். அவர்களின் ஓவிய மொழி சப்தங்களை அடிப்படையாகக்கொண்டதல்ல. அர்த்தங்களை/பொருளை அடிப்படையாகக்கொண்டது Non linear Orthography.இதில் மனித மொழி போன்று இடமிருந்து வலமோ , இல்லை வலமிருந்து இடமோ இல்லை. எல்லாம் ஒரு சுழலில் எழுதப்படுகிறது. ஒரு வட்டம் போல , ஆங்காங்கே சின்னஞ்சிறு முடிச்சுகளுடன், முடிச்சுகள் அதே இடத்தில் நிலைப்பதில்லை , வேறுபாடு காண்பிப்பதற்காக சுழலில் வேறு வேறு இடங்களில் முடிச்சு விழுகிறது. முடிச்சு இறுக இறுக அதை விடுவிக்க முயற்சிப்பவர்க்கு இன்னமும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. கணிதக் குறியீடுகளைப்போல/புதிர்களைப்போல  அவற்றை விடுவிக்க வேண்டியிருக்கிறது.

தலைவி ஒரு மொழிப்பேராசிரியர் , பல்கலைக்கழகத்தில். உலக மொழிகள் குறித்த தேர்ந்த அறிவு படைத்தவர். ஒரு காட்சியில் அவரை தவிர்த்து விட்டு இன்னொருவரை பணியமர்த்த ராணுவ அதிகாரி முயற்சிக்கும் போது, சமஸ்கிருதத்தில் 'போர்' என்ற சொல்லுக்கு என்னெவென அழைப்பார்கள் என்று அவரிடம் கேளூங்கள் என்பார். அவருக்கு வடமொழியைக்காட்டிலும் பழைமையானது தமிழ் என்றறிருந்திருக்கவில்லையே என வருந்தினேன். Palindrome பற்றியும் பேசுகிறார். திருப்பிப் போட்டாலும் அதே உச்சரிப்பை தரக்கூடிய சொற்கள். எகா' விகடகவி தமிழில் ஆங்கிலத்தில் HannaH. தலைவர் அவரோடு சகபயணி ஒரு theoretical physicist. நிறைய கேள்விகள் அதைக்கேட்டு விடவேணும் என்ற ஆவல் அவருக்கு. ஒளியைக்காட்டிலும் கூடுதல் வேகத்துடன் பயணிக்கும் கப்பல் எங்கனம் உருவாக்க முடிந்தது ? ஈரிலக்க எண்கணிதம் (binary) அறிந்தவர்களா ?

இந்த மொழிச்சிக்கல்களிலிருந்து விடுபட்டு தகவல் தொடர்பை சரியாக கடப்பவனில்லை என்பதால் இன்னமும் சிங்கிள் என்கிறார். எல்லாம் இருந்தாலும் சிங்கிளாக இருப்பவரும் உலகில் உண்டு என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவைக்கிறார் தலைவி. இதைப்போல சின்னச்சின்ன உரையாடல்களே போதும் காட்சியின் சீரியஸ்னெஸ்ஸை வெளிப்படுத்த. இதை முதலில் தமிழில் செய்தவர் பாலு மகேந்திரா, பின்னர் மணிரத்னம் , காட்சிகளை அதிகம் அழுத்தம் கொடுத்து உரையாடல்களை சுருக்கி என.

ஒரு கட்டத்தில் அந்தச்சின்னப்பெண் அம்மாவிடம் கேட்பாள். 'யாரும் வெற்றி தோல்வி என அடையாது போகும் விளையாட்டின் பெயரென்ன ? போட்டியில் பங்கு பெறும் இருவருக்கும் என. உடன்படிக்கை/ Win-Win எனச்சொல்லி முடித்துவிடுவார். அது உண்மையில் Non Zero Sum Game.உறக்கத்தில் ஏலியன்களில் மொழியில் கனவு காண்கிறாயா ? என்ற கேள்வியெல்லாம் படத்தில் வருகிறது. எந்த மொழியில் சிந்திக்கறோமோ அதே மொழியில் கனவுகளும் வரும் என்பதே உண்மை. சீனாவின் ராணுவம் ஏலியன்ஸுடன் உரையாட அவர்களின் விளையாட்டான Mahjong ஐப் பயன்படுத்துகிறது. பேசிப்புரிய வைப்பதைவிட விளையாடி அவர்களின் உள்ளக்கிடக்கையை அறிந்துகொள்தல் எளிது என நினைத்து. வெற்றி தோல்வி சமரசம் உடன்படிக்கை வீழ்த்துதல் படிந்து போதல் என்பன விளையாட்டின் மூலம் தெரிந்து கொள்வது/ புரிந்து கொள்வது எளிது.

பின்னர் தலைவனும் தலைவியும் ஆங்கிலத்தில்  தமது பெயர்களை  எழுதிக்காண்பித்து உங்களின் பெயர்களை தெரிவியுங்கள் எனப்பணிக்கின்றனர். அதற்கும் ஏலியன்ஸ் ஒரு வட்டத்தில் பதிலளிக்கின்றனர். தொடர்ந்தும் பலவித சந்திப்புகளில் அவர்களின் மொழியை மொழிபெயர்க்க வாய்க்கிறது. ஒரு அணுக்கம் ஏற்பட்டு பின்னர் அதுவே தொடர்கிறது பின்னரான சந்திப்புகளில். அதுவரை கவச உடையணிந்து சென்று அவர்களைச் சந்தித்தது போய், சாதாரண உடையிலேயே சந்திக்கிறார் தலைவி. நேஷ்னல் ஜியாக்ரஃபி தொகா'வில் கழுகுகளைப்பற்றிய ஆவணப்படம் எடுக்கப்போன அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் ஒரு புகைப்படவியலாளர். முதலில் அத்தனை பெரிய காட்டில் அந்தக்கழுகின் கூட்டுக்கு சற்று தொலைவில் கூடாரம் அடித்து தங்கும்போது, பறவைகளுக்கே உரித்தான தற்காப்பு தாக்குதலில் பல முறை காயப்பட்டதாகவும் , பின்னர் அதுவாகவே உணர்ந்து இவன் நம்மைத்தாக்க, தம் குஞ்சுகளை  அழிக்க வரவில்லை என நன்கு உணர்ந்த பின்னர் தாக்குதலை நிறுத்தி இணக்கத்துடன் இருந்ததை தெரிவித்தார். அதுபோல நான்கு முறை சந்தித்தபின்னரும் அவர்களிடமிருந்து எந்தவிதமான தீங்கும்,கதிர் வீச்சுகளும் தம்மை தாக்கவில்லை என அறிந்து சாதாராணமாக காஃபி ஷாப்பிற்கு நண்பர்களைச்சந்திக்க செல்வது போல செல்கிறார்.



ஏலியன்ஸின் வட்ட ஓவியங்களிலிருந்து ஓரளவு புரிந்துக்கொண்டு அவர்களின் மொழியிலேயே ஒரு கட்டத்தில் இந்த பூமிக்கு வந்ததின் நோக்கமென்ன எனக்கேட்கப்படும் கேள்விக்கு  "offer weapon"என பதிலுரைக்கின்றன ஏலியன்கள். இங்கு தான் தவறான புரிதல் எற்படுகிறது, அவை சொல்ல நினைப்பவை "Use Tools"என்ற பதில். இவர்கள் புரிந்து கொள்தல் "offer weapon" என்று. அங்கிருந்து பிரச்னை ஆரம்பிக்கிறது.   ஏலியன்கள் நம்மைத்தாக்க வந்திருக்கின்றனர் என்ற தவறான புரிதல்களே முட்டலுக்கு சாத்தியப்பாடுகளை எடுத்து உரைக்கிறது.Tools என்பதற்கும் Weapons என்பதற்கும் உள்ள வேறுபாட்டை கண்டறிய நாட்கள் பிடிக்கிறது, அதற்குள் சைனா தாக்குதலுக்கு முற்படுகிறது. அதுவரை மற்ற நாடுகள் பெற்ற தகவலை பகிர்ந்து கொள்ளவும் தயங்குகின்றன. Weapons என்ற ஒற்றைச்சொல் போதுமனதாக இருக்கிறது ராணுவத்துக்கு. வேறென்ன வேண்டும் அவர்களூக்கு ? மொழிச்சிக்கல் யாருக்குத்தான் இல்லை. Slip of the Tongue என்று பெரிய தலைவர்களே சொல்லி தமது தவறை மன்னிக்க கோரும் இங்கு இவ்வளவு பெரிய சொல்லை எங்கனம் புரியவைப்பது ?

பின்னரும் அடுத்த சந்திப்பில் ஒரு கையால் ஏலியன் எழுத மறுகையால் தலைவி எழுதுகிறார். புரிந்து கொண்டதன் அடையாளமாக அந்தக்காட்சி கண்ணாடித்திரை முழுக்க ரொம்பவும் சிக்கலான ஓவியங்கள். தலையைப்பிய்த்துக்கொள்ளுமளவுக்கு. அத்தனையும் காலம் குறித்தான சிக்கல்கள் என தெளிவாகிறது. காலங்கள் கடந்த கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எதிர்காலத்தைப் பற்றியதான ஓவியச்சிக்கல்கள் இடியாப்பச் சிக்கல்கள். விடுவிக்க ஆண்டுகள் பிடிக்கும் என்கிறான் பிஸிசிஸ்ட். மனம் பிறழ்ந்த ஓவியனின் அதி தீவிர மனச்சிக்கல்களின் குறியீடாக அந்த கடைசி ஓவியங்கள் அவர்களைக் குழப்புகின்றன. என்ன தான் விடை என்னதான் சொல்ல விழைகின்றனர், என்ன செய்தியைத்தெரிவிக்க இத்தனை குழப்பமான ஓவியங்கள் ?! காலத்தை திறக்கும் சாவி tool-கருவி தலைவியின் கையில் உள்ளது. என்று முடிக்கிறது அந்த ஏலியன். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று - chosen one! ஏலியன்களின் ஓவியமொழியைக் கற்றுக்கொண்டால் காலங்கடந்தும் சிந்திக்கவியலும், எதிர்காலம் பொதிந்து வைத்திருக்கும் பரிசுகளை அறிய வழி வகுக்கும் என்பதை உணர்த்துகிறது.

இந்தத்திரைப்படத்தில் முகப்பிலும் கடைசியிலும் பயன்படுத்தப்பட்ட அந்த சின்ன சிம்ஃபொனி அளப்பரிய உணர்வுகளை நம்முள் கிளர்ந்துவிடுகிறது. மேக்ஸ் ரிக்டரின் On the Nature of Daylight என்ற இசைக்கோவை. எத்தனை முறை திரும்பத்திரும்ப இசைத்தாலும் உள்ளுக்குள் கள் போலிறங்கி ஊறித்திளைக்கிறது. எப்போதும் திரும்பியே வராத காலத்துக்கு திரும்பத்திரும்ப இசைக்க வைக்கும் கோவை. 01:43ல் தொடங்கும் அந்த லீட் வயலின் பிழியும் நமக்குள் சோகத்தை. இங்கு தலைவியின் குடும்பம்,அவளின் குழந்தை பற்றிய முதல் மற்றும் கடைசிக்காட்சிகளில் இந்த இசை எடுத்தாளப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட  நான்கைந்து வயலின் கற்றைகள்/இழைகள் பின்னில் ஒலிக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தாளலயம். நேரப்பரிமாணங்கள். இருப்பினும் லீட் வயலினுடன் இசைந்து இணைந்து ஒலிக்கும் இசைக்கோவை. Sustaining Notes கொண்ட வயலினில் இசைப்பது என்பது பேரின்பம். இழைத்து முடித்தபின்னரும் தொடரும் ஒலி. வாழ்ந்து முடித்த பின்னரும் மனதில் தொடரும் காலம் போல. மேக்ஸ் ரிக்டர் எந்த உளநிலையை பிரதிபலிக்க இசைத்தாரோ அதை சரியாக இனங்கண்டுகொண்டு இங்கு திரையில் பொருந்திப் போகும் காட்சிகளுக்கு ஒலிக்கவிட்டிருப்பது சாலப் பொருத்தம். சிக்கலான இசைக்கோவை இல்லை, இருப்பினும் உளச்சிக்கலை இன்னமும் பிரிக்கமுடியாதபடி இறுக்கிக்கட்டி படுமுடிச்சுப்போடும் இசைக்கோவை. திரையில் ஏலியன்களின் மொழிச்சிக்கல் இங்கு மிக எளிதான இசைக்கோவை, முரண்களாலானது உலகம். 






Friday, January 13, 2017

வர்லாம் வர்லாம் வா..பைரவா.


வர்லாம் வர்லாம் வா..பைரவா. இவ்வளவு இளமை உடலிலும் குரலிலும் ஹ்ம்... கமலுக்கு மட்டுமே வாய்க்கும் அந்த மேஜிக். இங்க தளபதிக்கும்.சரி சரி எத்தினி படந்தாண்ணா இப்டீல்லாம் நட்சிக்கினே இருக்கிறது ?! அதெல்லாம் பத்தி வணிகநாயகர்கள் கவலைப்படணுமா என்ன ? அதான் தைரியமா , சட்டையே பண்ணாம இறுக்கின சட்டை போட்டுக்கிட்டு டைட் பேன்ட் போட்டுக்கிட்டு இறங்கி அடிக்கிறார் கில்லி. அந்த சின்னப்பெண்ண கடத்தி வெச்சிட்டு அப்பால ஒரு ஃபைட்டு ,,ஹா.. சம்மதிக்கணும் சாரே. அதுல ஒரு அல்லக்கை அடி வாங்கிட்டு சக்கரம் போல காற்றில் சுழன்று விழுகிறார். அதான் எப்டீன்னு தெரில. இந்த கம்பி கட்டி தொங்குறது, கயிறு கட்டி தொங்குறதெல்லாம் மேட்ரிக்ஸ்க்கு அப்புறம்தான் தமிழ்லயும் ஆரம்பிச்சது. அப்பால டிஜிட்டல் பிரின்ட்ல சின்னதா ஒரு எரேஸர் வெச்சிக்கிட்டு அந்த கம்பி/கயிறு வகைறாவ அழிச்சிடலாம்னு வெச்சுக்குங்க. இருந்தாலும் இங்க மாட்டு வண்டி சக்கரம் போல சுழன்று விழுகிறார். அந்த ஃபைட்டு ..ஆஹா.. 



இருக்கிறதுலயே வணிகப்படம் எடுக்கறதுதான் கடினம். எங்க பாட்டு வெக்கிறது, எங்க ஃபைட்டு வெக்கிறதூன்னு தலயே வெடுச்சிரும். தல' உருவம் எப்டி இருந்தாலும் பரவால்ல,  சால்ட் பெப்பர் ஸ்டைல்லாம் வெச்சிண்டு தூள் கெளப்புவார். நம்ம தளபதி எப்பவும் இளமை குன்றாது "மாண்புமிகு மாணவன்" போலவே இருப்பார். அதான் விசேஷம். வயசே ஆகாதாங்ணா உமக்கு? சரி குரல்ல எப்டி வயசு தெரியாம சமாளிக்கிறார்னு தான் தெரில.!  இடைவேளைக்கு முன் ஒரு காமெடியன், பின்னொரு காமெடியன் என்ற இப்போதைய ட்ரென்டு இங்கும்.  அவ்வளவு பெரிய ஃப்ளாஷ்பெக்கை ஒரு பேருந்து நிலையத்தில் நடுவில் நின்று கொண்டு 'வாய்ஸ் ஓவரில்' சொல்வதெல்லாம் அரத காலப்பழைய டெக்னிக். சொல்லப்போனா கீர்த்தி தான் ஃப்ர்ஸ்ட் ஹாஃப் ஹீரோ. செகன்ட் ஆஃப்ல தான் தளபதி ஹீரோ.



ஜேம்ஸ்பான்டு படங்கள்ல எவ்வளவு தான் அடிபட்டாலும் ரென்டு சிலுப்பில எல்லாக்காயத்தையும் சரி பண்ணிடுவார்னு காமிச்ச காலங்கள்லாம் போயி 'பியர்ஸ் ப்ராஸ்னன்' தான் நெனக்கிறேன். ஆஸ்பத்திரில்லாம் போயி கட்டு கிட்டெல்லாம் போட்டுக் கிட்டு அப்பால அடிச்சு தூள் பண்ணக்கிளம்புவார். அதே மாதிரி இங்கயும். கம்பில பூட்டெல்லாம் போட்டு கட்டி வெச்சிட்டு டானியல் பாலாஜி, வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கும்போது தளபதி வெறும் ஹேர்பின்னை வைத்து கழற்றிவிட்டு வெளியேறுகிறார், அடுத்த காட்சி அம்ணி டாக்டருல்லா, அதான் ஊசி போடுது. இத்தனை அழகான கீர்த்தி தின்னவேலி பாஷை பேசுது ..ச்சை..வேணாங்ணா. டும்டும்டும்'ல இது மாதிரிதான் ஜோதிகா டின்னவேலீ பாஷா பேசிண்ட்ருப்பா.ஹிஹி.. ஆனாலும் விஜய்யின் குறுகுறுப்புக்கு த்ரிஷாவுக்கு அப்புறம் கீர்த்தி தான் செம ஃபிட்டு!


எல்லா ஃபைட்டுக்கும் 'வர்லாம் வர்லாம் வா'ன்னு சநா போட்டுத்தாக்குறார். தூள் விக்ரம்க்கு பரவை முனியம்மா ஆயா பாடின 'சிங்கம் போல' பாடல் இங்க ரிப்பீட்டூஊ. இருந்தாலும் அந்த எலெக்ட்ரிக் கிட்டார்ல வரும் முகப்பிசை அதிரத்தான் செய்கிறது. பிற பாடல்கள் எல்லாம் விஜய்க்கு பண்ணினது போல க்ளீஷெ. இதே விஜய்க்கு ரஹ்மானும் இசையமைத்தார் இரெண்டொரு படங்களுக்கு அவரின் பாணியே மாற்றாமல் ( உதயா, அழகிய தமிழ் மகன்) அது கொஞ்சம் கூட செட்டாகவேயில்லை விஜய்க்கு. அதான் இங்க இறங்கிட்டார் பழைய படிக்கு, இருப்பினும் சநா விஜய்க்கு பணிந்துவிட்டதிலேயே பாடல்களெல்லாம் கேட்கும்படியே இல்லை. பின்னணி இசையில் அடித்துக் கிளப்பியிருக்கலாம் தான் அங்கும் வெறுமனே, அருண்ராஜின் வர்லாம் வர்லாம் வா..ஹ்ம்..சலிக்கிறது. வேற ஜானர் ட்ரை பண்ணல்லாம் இந்த தனுஷு, விஜய்லாம் விடவே மாட்டா :)  கபாலி முழுக்க ரஞ்சித்தின் கட்டுப்பாட்டிலிருந்ததால் தப்பிப்பிழைத்தது.



கத்தீல குழாய்லல்லாம் உக்காந்து ப்ளான் போட்டு எதிரியக்கவுத்தவர்,துப்பாக்கீல டீம் வொர்க் பண்ணி எதிரிய துவம்சம் பண்ணினவர் இங்க ஒரு ஆஃப்டர் ஆல் கசாப்பு கடைக்காரனை வெட்ட விட்டுருக்கார் பரதன். சம்பவங்கள் எதிலும் புதிதில்லை. வழக்கமான மசாலா. இருப்பினும் ஒத்த ஆளா நின்னு படத்தயே தூக்கிக்கினு அலயுறார் விஜய்!  முருகதாஸ் மட்டுமே இத்தனை களேபரத்திலும் ரசிக்க வைத்தார் விஜயை வைத்துக் கொண்டு. விசிலடிக்கும் கூட்டமும் , டிக்கெட்டுக்கு ஐந்நூறு கொடுத்தும் ப்ளாக்கில் வாங்கிப்பார்க்கும் கடினச்சாவு விசிறிகள் இருக்கும் வரைக்கும் இது போன்ற படங்கள் எப்போதும் தோற்காது.
#பைரவா



Thursday, January 12, 2017

தலைப்பில்லாத கவிதைகள்


ரயிலின்
கடைசிப்பெட்டி
ஒரு கவிதை.

***
அணுகுண்டுக்கும்
அழியாத
கரப்பான்பூச்சி
காஃப்க்கா

***
கடலுக்கு
அலைகள்
க்ளீஷே

****
எனக்கும் கவிதை வாசிக்கத்தான் விருப்பம்
இந்த முன்னிரவில்
இதுவரை யாரும் எழுதவில்லையே ?!

***
ஜன்னல் கதவைத்திறந்தால்
மேகம் உள்ளே வந்துவிடுமோ
என்ற பயம்
அடைத்தே வைத்திருக்கிறேன்

***
என்னை எரித்துவிட்ட
சுடரில்
சாம்பல் படிந்திருக்கிறது

***
உன் ஆயுதங்களை
மௌனித்திருக்கிறாய்
எனக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது
பெரும் சமர்

***
ஆசைப்படாமல் இருக்கிறேன்
கிடைக்கிறதா எனப்பார்க்கலாம்….

****
எனது சிறந்த கவிதை
இன்னும் எழுதப்படவில்லை
ஆனால் உன் தந்தை

****
கடவுளையும்
ஆப்பிள்
உண்ண வைத்தவள்

***** 


என்றும் மின்சாரம் தீராத
மின்மினிப்பூச்சி
அவள்

****
இனி உனை
முத்தமிடக்கூடாது
என்றிருக்கிறார்
மருத்துவர்

****
எனக்குள் நானே
சொல்லிக்கொள்ளாததையா
என் கவிதை
சொல்லிவிடப்போகிறது ?

*****
எப்படியும் இந்தக்கவிதையை
இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்
என்றுதான் சொல்லப்போகிறீர்கள்.

*****
சாத்தானைப்
பிரார்த்தித்துக்கொண்டு
உன்னைக்காதலிக்க
விழைகிறேன்
ஒவ்வொரு முறையும்
கடவுளையே
துணைக்கழைக்கிறாய்

*****
ஒரு சன்னலை
அடைத்தால்
மறு சன்னல் திறக்கும்
என்றுதான் இருக்கவியலும்.

*****
இக்கால இறுவட்டு
போலிருக்கிறாய்
அக்கால ஒலிப்பேழைகள் போல்
மறுபக்கமேயில்லை
உன்னிடம்

*****
உன் அழகைப்போல்
என் ஆன்மாவிற்கும்
வயதாவதில்லை

****
என்றும் நரைக்காத
மயிற்தோகை
உந்தன் குழல்

*****
கடவுள் கொடுத்த
ஆப்பிள் நீ
எனக்கு

*****


யுகங்கள் கடந்தும்
போதி மரம்
ஞானம் பெறவில்லை.

****
உனக்கென விட்டுக்கொடுத்து
விட்டுக்கொடுத்து
நீயானேன்

****
காதலை
எடுத்துச்சென்ற
உறக்கம் அவள்

*****
ஒரு சிறிய
காதல் கிரகத்துள்
அடக்கிவிட இயலாது
உனை

****
நீயே நோய்
நீயே மருந்து
நீயும் ஒரு கார்ப்பொரேட்

****
அகாலத்தினாற்செய்த உதவி
அண்டத்தினும் சால சிறிது

****
நான் ஒன்றுமில்லாததை
கொடுக்கிறேன்
எடுத்துக்கொள்வாயா ?

****
சுஜாதாவுக்கு
ஸ்ரீதேவியின் மூக்கு
லாசராவுக்கு
ஈர உடையுடன்
படியிறங்கும் பெண்
பாலகுமாரனுக்கு
செருப்பில் ஒட்டிய சோறு
நகுலனுக்கு சுசீலா
எனக்கு…
வாசிக்கும் நீங்களே
சொல்லுவீர்கள் இப்போது

*****
மீன் என்ற சொல்
நீர் என்ற சொல்லில் நீந்திக்கொண்டிருக்கிறது
தூண்டில் எனும் சொல்லால்
புழு என்ற சொல்லைக்கொண்டு
பிடிக்க முயன்றேன்
முள் என்ற சொல்லில்
சிக்கிக்கொண்டது

*****
சலனமற்ற
தெளிவான குளமும்
என் முகத்தை
கலக்கியே காண்பிக்கிறது

*****
என்னோடு
நிழலையும் சேர்த்துப்புதையுங்கள்
தனிமையில் வாடாதிருக்கட்டும்

*****
நானெழுதுவதெல்லாம்
கவிதைக்ள் தான்
நீ எழுதும்வரை

****
தரவுகளில்லாத
தவறுகள்
உனது

*****
உடனுள்ளவரெல்லாம்
காகிதக்கப்பல்
செய்துகொண்டிருக்கும்போது
நான் கத்திக்கப்பல்
செய்துகொண்டிருந்தேன்

*****
ஒவ்வொரு குயிலிடமும்
வேறு வேறு
கானங்கள் இல்லை

*****
இத்தனை அழகான
பட்டாம்பூச்சியை
பராமரிப்பது
அத்தனை கடினமான
இருக்கிறது
கம்பளிப்பூச்சியாக மாறிவிடு.



http://malaigal.com/?p=9618