Monday, December 10, 2012

மூன்று பேர் மூன்று காதல் நிறைய இசை



யுவனும் , வஸந்த்தும் சேர்ந்து வெகு நாட்களுக்குபிறகு (சத்தம் போடாதே’க்குப்பிறகு) இணைந்திருக்கும் படம்.நிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்திருக்கும் பாடல்கள். ‘ஆதலினால் காதல் செய்வீர்’, ‘ஆதிபகவன்’ என்று இடையே சில ஆல்பங்கள் யுவனிடமிருந்து வந்திருந்த போதும் அவற்றில் சில பாடல்களைத்தவிர மற்ற எவையும் அவ்வளவாக ரசிக்க இயலவில்லை.எல்லாவற்றிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் படி இந்த ஆல்பத்தில் எந்தப்பாட்டை விடுவது எதை ரசிப்பது என்று திக்குமுக்காடச்செய்திருக்கிறார் யுவன்.!

 

ஆஹா காதல் கொஞ்சிக்கொஞ்சிப்பேசுதே

வசீகரிக்கும் ஒரு குரலுடன் நந்தினி ஸ்ரீரிக்கர் (‘ஆப்பிரிக்கா காட்டுப்புலி’ என்று ஆளவந்தானில் பாடிய அதே குரல் இவருடையது :) ) . அருமையான பியானோவுடன் ஆரம்பிக்கும் மனதைக்கொள்ளை கொள்ளும் பாடல். Repeating Rhythm உடன் கட்டிப்போட வந்திருக்கிறது இந்தப்பாடல். எப்பவும் வஸந்த் படங்கள்ல கர்நாடக இசை ராகப்பின்னணியில் ஒரு பாடலாவது வரும்படி பார்த்துக் கொள்வார்.நித்யஸ்ரீ குரல்ல பூவெல்லாம் கேட்டுப்பார்-ல் ‘பூவே உந்தன்’  ‘சத்தம் போடாதே’வில் ‘பேசுகிறேன் பேசுகிறேன்’ இங்கு ‘ஆஹா காதல்’. கணீர்க்குரலுடன், சரியாகப் பொருந்தி வரும் ராகம் இவருக்கானது, என எல்லாம் ஒருங்கே கூடி திளைக்கவைக்கும் அனுபவம் இது. இந்தப்பாடலை முதல் சரணத்திலிருந்து ஆரம்பித்து பின்னர் பல்லவி வரும் வரை காத்திருந்து கேட்டுப்பாருங்க, ,சுகானுபவம்யா..! கூடவே பாடும் பியானோ கட்டைகள் மனதின் அடியாழத்தில் போயி தட்டித்தட்டி எழுப்பிவிடுகிறது , நம்மை வேறு புறம் செல்ல விடாமல் தடுத்து உள்ளுக்குள்ளேயே ஒலிக்கச்செய்கிறது.

பொதுவா ராஜா’வின் பாடல்களில் தான் இந்த அற்புதங்கள் அநாயாசமாக நிகழும்.எடுத்துக் காட்டாக ‘பாண்டி நாட்டுத்தங்கம்’ படத்தில் வரும் அந்த ‘சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு’ பாட்டில் முதல் சரணத்தில் இருந்து தொடங்கி பின்னர் அதிலேயே பயணித்து சிறு இடையிசை ஏதுமின்றி பல்லவியை எட்டிப்பிடிக்கும்போது , அந்த Connection எந்தப்பிசிறுமின்றி ஒட்டிக்கொள்ளும் நம் மனதில், இன்னொருமுறை வராதா என்று ஏங்கிக்கிடக்கும்போது இரண்டாவது சரணம் ஆரம்பித்து , பயணித்து பின்னர் பல்லவியைப்போய் அடையும் , ஹ்ம்...அதுதான்யா பாட்டு....அப்படி ஒரு அற்புதம் வெகு நாட்கள் கழித்து இந்த “ஆஹ்ஹ்ஹா காதலில்’ அனுபவிங்க..!

இல்லை அப்படிக் கேட்கப் பிடிக்கவில்லையெனில் முதலில் பல்லவியில் தொடங்கி பின்னர் சரணம் வந்து உள்ளுக்குள் உலவவிடுங்கள்..ஆஹ்ஹா சரக்கு இறங்கியிருக்குது மச்சி.. :) ‘பெண்கள் மனமொரு ஊஞ்சல் இல்லை, ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை, இழுப்பது நீயா, வருவது நானா ?! ...ஆஹ்ஹா என்ன வரிகளடா..!’ ( ந.மு’வின் வரிகள் )

2:25ல் தொடங்கும் அந்தப்புல்லாங்குழல் சிறுதூறலினூடே வந்து செல்லும் தென்றலைப்போல நம்மை நனைத்துச்செல்கிறது. இடை இசை என்று சொல்லிக்கொளும்படியாக இந்தப்பாடலில் இருப்பினும் அதைக்கவனிக்க வைக்காது, அதை விரைவில் முடிந்து நந்தினியைப் பாடவைத்து நம்மை சொக்க வைக்கிறார் யுவன்.பாடல் முழுக்கவே பியானோவும், வயலினும் கூடவே பாடிக்கொண்டிருக்கிறது. வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற கூற்றுக்கே இடமில்லை இந்தப்பாடலில். Lead Guitar முழுக்க பின்னணியில் இருந்து ஒலித்து எடுத்துக் கொடுக்கிறது அவர் பாடும் வரிகளை , எந்த இடத்திலும் அவரின் குரலை மீறாமல்.( நந்தினியே ஒரு Guitarist தான் ..:) )

‘பாரதி கண்ணம்மா’ பாட்டில் வரும் சரணத்தில் ‘நிலாக்காலங்களில் சோலைகளில் ஆடும் சுகம் கோடி” என்பது போல கொஞ்சம் ( கொஞ்சமே தான் அதிகமில்லை :)) பாடலின் தொடக்கத்தில் ஞாபகப்படுத்துகிறது இந்த ஆஹா காதல் :) .மேலும் ராஜாவின் “Nothing but Wind “ ஆல்பத்தில் வந்த “Song of the Soul “ போல பின்னணித் தாளம் இசைக்கிறது  இருப்பினும் அதிலிருந்தே வேறுபட்டே நிற்கிறது இந்த ‘ஆஹ்ஹ்ஹா பாடல்’.கூடவே பாடிவந்த அந்த வயலின் 2:09ல் பெருங்குரலெடுத்து நந்தினியை ஓய்வெடுக்கச்சொல்லி தானே இசைக்கிறது பாடலை,,அதோடு பாடல் முடியும் நேரத்தில் 3:38லும் 3:56லும் இடையிடயே தம் குரலெடுத்து நம்மை தாலாட்டுகிறது..... ஆஹா காதல்... காதல் ‘எப்பவுமே’ நல்லாத்தானிக்கு இல்ல..?! :) அதுவே ‘ஆஹா காதல்’ங்கறப்போ இன்னும் நல்லா இருக்கு :) :) 


 

காதல் எந்தன் காதல்

‘பேசுகிறேன் பேசுகிறேன்’ என்று சிறு உச்சரிப்புப் பிழையுமின்றி பாடி நம்மை கொஞ்ச காலம் முன்பு இதே வஸந்தின் ‘சத்தம் போடாதே’ படத்தில் மகிழ்வித்த அதே ‘நேஹா பஸீன்’ தமது ஐஸ்க்றீம் குரலுடன் பாடி மகிழவைக்கிறார் இங்கு “ காதல் எந்தன் காதல் “ என்று :) கொஞ்சம் அரேபிய பின்னணி இசையில் அமைந்த பாடல் இது. கைதட்டி ரசிக்க வைக்கும் ராகம். ‘முகர்சிங்’ என்ற அதிகம் இப்போது கச்சேரிகளில் இடம்பிடிக்காத காற்று இசைக்கருவி கொண்டு (அப்டித்தான் நினைக்கிறேன் , இப்ப எல்லா வாத்தியங்களும் Synth லேயே இசைக்கமுடியும் :) ) இசைக்கப்படுகிறது. பல இடங்களில் தனித்து “தனியாவர்த்தனம்” செய்து நமது உணர்வுகளை நிமிண்டி விடவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது அதற்கு.! 3:30ல் ‘ஏலேல ஏலே’ என்று நேஹா பாடும் போது நமக்கும் கூடவே பாடத் தோன்றுகிறது.
 

படபடக்குது மனமே

மூன்று விதமான ராக பாவங்களுடன் இந்தப்பாடல் அமைந்திருக்கிறது. Blaze இங்கிலீஷ்ல பாட்றார் ஹிப் ஹாப்பில், க்ரிஷ் பாட்றார் சாதாரணமா நம்ம பாட்டுமாதிரி.கேட்க இனிமையாகத் தானிருக்கிறது. ஒரே பாடலில் ராகங்களின் பலவித Variations  ஐக் கேட்க முடிகிறது,  இந்த  Variations , ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’ படத்தில் வரும் “என் ஜன்னல் வந்த” பாடல் போல,முதலில் வழக்கமான யுவன் பாணி, இடையிடயே HipHop பின்னர் குத்துப்பாடல் போல அமைந்திருக்கிறது.

இடை இசையில் ஒலிக்கும் அக்கார்டியனும், ட்ரம் பீட்ஸும் , மங்காத்தா’வின் ‘பல்லேலக்கா’ பாடலை நினைவு படுத்துகின்றன. Blue வின் ‘One Love “ போல இதுவும் ஒரு addiction ஆகத்தான் போகிறது எல்லோருக்கும். இடையில் வந்து செல்லும் வரிகளைப்பாடாமல் சொல்லிச்செல்வது போல அமைத்திருப்பது அருமை. முன்பு பழைய படங்கள்ல வகையறா , தொகையறா’ங்கற மாதிரி வெச்சு பாட்டு ஆரம்பிக்கிற முன்னால அதுக்கு கட்டியம் கூறுவது போல அமைத்திருப்பர்.அது மாதிரி இங்கே பாட்டின் இடையில் வந்து செல்கின்றன இந்த சொல்லிச்செல்லும் வரிகள்.

கொஞ்சம் அமைதியா உட்கார்ந்து , இரண்டு மூன்று முறை தொடர்ந்து கேட்கும்போது மட்டுமே இதைப்புரிந்து கொள்ள முடியும், ஏனென்றால் இந்தப்பாட்டின் கட்டமைப்பு ஒரு புதிய வகையில் இருக்கறதால. தொடர்ந்து கேட்டுப்பாருங்க, பிடிக்கும்!



ஸ்டாப் த பாட்டு

"Start music" ன்னு சொன்ன எல்லாரும் இப்ப  "stop the paatu" ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க thats what called as addiction :) ரமேஷ் விநாயகம் குரல் கொஞ்சம் “கங்கை அமரனின்” குரல் போல ஒலிக்குது சில இடங்கள்ல.ஜாலியா ஒரு பாட்டு போடலாம்னு நினைச்சு போட்ட மாதிரி இருக்கு. ‘புதுப்புது அர்த்தங்கள்’ல வர்ற ‘எடுத்து நான் விடவா” ங்கற பாட்டு மாதிரி அதே Genre-ல்  ஒலிக்கும் பாடல் , இது ஒரு வைரஸ் போல எல்லொரையும் அஃபெக்ட் பண்ணியே தீரும். :) பாடலின் இடையிடையே வரும் க்ளாரினெட்டும், தாளக்கட்டும் நம்மைத் தாளம் போட வைக்கிறது.


உனக்காகவே உயிர் வாழ்கிறேன்

வஸந்த் எப்பவும் தன் பேட்டியில சொல்வது “ யுவன முதலில் இசையமைக்க அணுகியபோது எப்பவும் “Video Games” விளையாடிக்கொண்டே இருப்பார்னு. அது மாதிரி இசை அமைந்திருக்கிறது. 1D dimension Comptuer Games-க்கான இசை போல ஒலிக்கிறது பல இடங்களில். Mild Rock தான் இது..."Touch by an angel" என்று சொல்லும்போது தெளிவாகத்தெரிகிறது Rock ஐத் தொட்டுச்செல்கிறது பாடல் என்று. யுவனுக்கு எப்பவும் Rock ல அமைந்த பாடல்கள் தான் அவரோட Range க்கு ஒத்து வருகிறது.அது ‘நீஎபொவ’ படத்தில் வரும் “பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா “பாட்டு பாடியபிறகு தான் எனக்கு தெரியவந்தது இவருக்கு அமைந்து வரும் பாடல்கள் எல்லாம் Rock based  என்று. இப்ப அவர் பாடின பழைய பாடல்களக்கொஞ்சம் கேட்டுப்பாருங்க “கண்ணோரம் காதல் வந்தால் (நான் மகான் அல்ல) ”, “எதோ ஒன்று என்னை(பையா), என் காதல் சொல்ல நேரமில்லை (பையா), வெண்ணிற இரவுகள் (பேசு) எல்லாமே Rock based தான்.இதயும் புரியவைக்கறதுக்குக்கூட ராஜா தான் தேவைப்பட்றார் நமக்கு :) சோகப்பாடல் தானிது. “தீபாவளி’யில் வந்த “போகாதே” Genre ல் ஒலிக்கிறது பாடல். என்னவோ இந்தக்காதல் தோல்விப்பாடல்கள்னாலே யுவன் தான்.அவர் குரல்ல பாடும்போது நமக்கே நம்மை அறியாம சோகம் நம்மைச்சூழ்ந்து கொள்கிறது.

 

மழை மழை

பியானோவின் சிணுங்கல்களில் ஆரம்பிக்கும் இந்த இன்னுமொரு மழைப்பாடல். “ நான் உன்னைப் பார்த்த நாளிலே ஜன்னல் தாண்டிப் பெய்தது மழை” என்று கார்த்திக் பாடும்போது நம் மனதுக்குள்ளும் அந்தச்சாரல் எட்டிப்பார்க்கிறது. கார்த்திக் கேட்க ஷ்வேதா பதில் சொல்வத் போல அமைந்திருக்கும் சரணங்களில் கொஞ்சம் குழப்பத்தான் செய்கிறது பாடல் ,பின்னர் பல்லவியில் மீண்டும் சரியாகிவிடுகிறது பாடல். இடையிசையில் humming ஒரு பெரும் புல்வெளிப் பிரதேசத்திற்கே இட்டுச்செல்கிறது. ‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்தில் வரும் ‘காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே “ பாடல் போல ஒரு ஹாயான பாடல், மயக்கத்தில் ஆழ்த்தும் மழை இது :) “துளித்துளித்துளி மழையாய் வந்தாளே”, “அடடா மழடா” மாதிரி அடித்துப் பெய்யும் மழையில்லை இது , உங்களுக்குத் 
தெரியாமலேயே மெல்ல நனைத்துச்செல்லும் சாரல் இது :)
  



 .
 

 

Saturday, December 8, 2012

பாவைக்கூத்து



புதிதாக வெள்ளையடித்த சுவரில்
நகத்தை வைத்துக் கீறும்போது ஏற்படும்

மனக்குறுகுறுப்பை உள்ளூர ரசிப்பது,

மண்ணெண்ணெய் பாட்டிலைத் திறந்து
அதன் மணத்தை தான் மட்டும் நுகர்வது,


ஆகக்கூடுதல் சிரமத்திற்குப் பின்னர்
கைவிரல்களால் பிடித்த வண்ணத்துப்பூச்சியின்
நிறத்தை உற்றுநோக்குவது.


இப்போது அடிக்கப் போகும் பெரிய அலை
கண்டிப்பாகத் தன் காலை நனைத்தே தீரும்
என நினைக்கையில்
அது அருகில் கூட வராமல் போவதை ரசிப்பது,


தரைமட்டமான கட்டிட இடுபாடுகளிலிருந்து
சிறு சிராய்ப்பு கூட இல்லாமல் மீண்டுவருவது,


சிறு கண்ணாடிக்குடுவையின்
உள்ளுக்குள் நீந்தும் மீனை வெளியிலிருந்து
ஏதும் செய்ய இயலாது பார்க்கும்
பூனை மனத்துடன் சில சமயங்களில் இருப்பது,


எனக்கென்னவோ
இவையெல்லாவற்றிற்கும்
காதலுக்கும் தொடர்பிருக்கிறது
என்பது போலத்தான் தோணுகிறது.


 





Tuesday, December 4, 2012

ஆழ்ந்தபுரிதல்



வழியோரக்காட்சிகள்

வெளிக்கிளம்பும் எனக்கு
எவையெல்லாம் காணக்கிடைக்கிறது ?

காலுடைந்த எப்போதும்
அதே தெருவைச் சுற்றிக்கொண்டிருக்கும் நாய்,
வழியில் தென்பட்டும் கண்டுகொள்ளாமல்
சென்று விடும் நண்பன்,
உண்டியல் குலுக்கிக்கொண்டு வரும் திடீர் பக்தன்,
ஆறு மாதமாகியும் கட்டாத குடிநீர்க்குழாய்ச்
சந்தாவை ஒரேயடியாக வசூலித்துக்கொள்ள
நினைக்கும் முனிசிபாலிட்டி ஓவர்சீயர்,
சந்திக்கவே கூடாதென
தவிர்த்துக்கொண்டிருந்த நபர்,
இதுவரை அவனுக்காகவே
காத்துக்கிடந்தும் வராத வண்ணான்,
எத்தனை முறை மணியடித்தாலும்
நகரவே நகராத எருமைகள்,

அதுவும் சரிதான்.
நம்மையெல்லாம் எதிர்ப்பட வேறு யார்
வந்துவிடப்போகின்றனர் ?



ஆழ்ந்தபுரிதல்

வெளிவரும் இதழ்களில்
கவிதை என்ற தலைப்பின் கீழ்
இடப்படுவதால்
வரிகள் மடிக்கப்பட்ட
என் உரைநடைகள்
அனைத்தும் கவிதை என
தவறாகப்புரிந்து கொள்ளப்படுகின்றன.

மேற்கண்ட சொற்கள்
மடங்கிய உரைநடையை
அனுப்பிவைத்திருக்கிறேன்
இதழ்களுக்கு
உங்களோடு சேர்ந்து
எனக்கும்
ஆவலாயிருக்கிறது
எந்தத்தலைப்பின் கீழ்
இது வெளியாகுமென..


.

Wednesday, November 28, 2012

பூனை மகாத்மியம்



ஒரு மழை நாள் ராத்திரில , என்னோட கம்ப்யூட்டர் ரூமுக்குப் பின்னாலிருந்த பால்கனிலிருந்து பழைய பாத்திரங்கள்லாம் போட்டு வெக்கிறதுக்காக சும்மா கிடந்த அலமாரில ஏதோ விழற மாதிரி சத்தம் கேட்டது .ராத்திரி மழைல மேல் வீட்லருந்து எதாவது பூந்தொட்டி ,இல்ல செடி கிடி விழுந்துருக்கும்னு நினைச்சு சும்மா இருந்துட்டேன் எழுந்து பாக்காம. காலைல எழுந்து பாத்தா ஒரு பெரிய பூனை கொஞ்சம் வயிறு உப்பலா , கதவத்திறந்த என்னையே கொஞ்சம் பாவமா பாத்துது.சரி ஏதோ மழைக்கி ஒதுங்கிருக்கும். இருந்துட்டுப்போகட்டும்னு விட்டு வெச்சேன்.ரெண்டு நாள் கழிச்சு ‘கிய்கிய்’"னு ஏதோ சத்தம் வந்தது அந்த அலமாரீலருந்து, போய்ப்பார்த்தா ஒண்ணு இல்ல ரண்டு இல்ல, ஆறு குட்டி போட்டிருந்தது அந்தப்பூனை.

ஒண்ணொண்ணும் ஒவ்வொரு கலர்ல.ஒண்ணு முழுக்க கறுப்பு, கொஞ்சம் அதோட அம்மாவ மாதிரியே சாம்பல் கலர்ல ஒண்ணு, இன்னொண்ணு முழுக்க பூசினாப்ல அங்கங்க திட்டு திட்டா வெள்ளையும் கறுப்புமா இப்டீ ஆறு குட்டிகள்.! எனக்கு இதுவரை இந்தப்பூனை , நாய் இதெல்லாம் இந்தச் செல்லப்பிராணிகள்லாம் வளர்த்து அனுபவமில்ல.சரி, என்னதான் ஆகுதுன்னு பார்ப்போமேன்னு அங்கயே வளரட்டும்னு விட்டு வெச்சேன், அப்ப அந்தக் குட்டிகளுக்கு கண்ணு கூடத்திறக்கல.ஒண்ணோட ஒண்ணு முட்டி மோதிக்கிட்டு ஒண்ணு மேல ஒண்ணு விழுந்துக்கிட்டு போறதப்பாத்தா எனக்குச் சிரிப்புத்தாங்கல. அப்பப்ப பால்கனிக்கதவத் திறந்து பார்க்கிறதும் மூட்றதுமா இருந்தேன்.


காபி போட்றதுக்கு வெச்சிருக்கிற பால்ல கொஞ்சம் தண்ணியக்கலந்து ஒரு கொட்டாங்குச்சீல ஊத்தி அம்மா பூனைக்கு வெப்பேன்.மடக்கு மடக்குன்னு குடிச்சு ஒரே நிமிஷத்துல காலி பண்ணிரும். பாவம், அதுக்குப்பசி. குட்டிகளை ஈன்றபின்னர் அவைகளை விட்டு வெளியில போயி இரை தேட முடியாத அவஸ்தை அதன் கண்களில் காண முடிந்தது.அது குடிச்சு முடிச்சவுடனே குட்டிகளுக்கு இடையே போய்ப்படுத்துக்கிட்டு அவற்றுக்கு பால் கொடுப்பதை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே அப்டியே தரைல உட்கார்ந்திருப்பேன்.

பெங்களூர்ல அப்ப அடைமழை இன்னும் ஆரம்பிக்கல.அதனால குட்டிகள் அந்த பால்கனில வெச்சிருந்த டீ.வி.அட்டைப்பெட்டிகள் பக்கத்துல படுத்துக்கிட்டு பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தன.அடிக்கிற வெயில்லருந்து தம்மைக் காத்துக்கொள்ள பெட்டிக்குப்பின் பக்கம் கூனிக்குறுகி முடங்கிக்கிடப்பதையும் பல சமயங்கள்ல பார்த்துருக்கேன்.அன்னிக்கு ராத்திரி சரியான மழை.எனக்கே கொஞ்சம் கஷ்டமாத்தானிருந்தது. அந்தக்குட்டிகள்லாம் என்ன பண்ணும், மழைல செமத்தியா நனையப்போகுதேன்னு. காலைல அவசரமா எழுந்து பார்த்தப்ப அதேதான் நடந்திருந்தது.எல்லாக்குட்டிகளும் நனைஞ்சு,ரோமங்கள்லாம் உடலோட ஒட்டிப்போயி நடுங்கிக் கொண்டிருந்தன. அம்மா பூனையைத் தேடிப்பாத்தேன் காணோம். இரை தேடப்போயிருக்கும் போல.


அரிசி வாங்கி வந்த ஒரு பாலித்தீன் பையை தரையில் விரித்து வைத்துவிட்டு , ஹோம் தியேட்டர் அட்டைப்பெட்டியை எடுத்து அதற்குள்ளிருந்த தெர்மோகோல்களை அகற்றிவிட்டு பெட்டியைக்கவிழ்த்து அதன் மேல் வைத்து விட்டேன். பெட்டிக்கு மேலே அந்த தெர்மோகோல்களை வைத்து தண்ணீர் உள்ளே விழாவண்ணம் பாதுகாத்து வைத்தேன். பூனைகள் உள்ளே சென்று வர ஏதுவாக கத்தியை வைத்துக்கீறி , அதன் உயரத்திற்கேற்றவாறு அந்தப்பெட்டியில் வாசல் அமைத்துக்கொடுத்தேன். குட்டிகள் அது வரை என் கால்பெருவிரலை ஏதோ புதிய ஜந்துவைப் பார்ப்பதைப்போல உற்று நோக்கிக் கொண்டிருந்தன.சில குட்டிகள் அதை நுகர்ந்து பார்க்கவும் எத்தனித்தன.

இதைச்செய்து முடிக்குமுன்னர் அம்மா பூனை வந்தேவிட்டது.எங்கே என் மீது தாவி நகங்களை வைத்துக் கீறிவிடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். அப்படி ஏதும் செய்யவில்லை. ஏதோ புதிய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதே என்று நோட்டம் விட்ட அது, முதலில் அந்த வாசல் வழி பெட்டிக்கு உள்ளே சென்று பார்த்தது. பார்த்த வேகத்தில் வெளியே வந்து குட்டிகளைத் தம் பற்களால் கவ்வி எடுத்துச்சென்றது. அதைப்பார்த்த மற்ற குட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக உள்ளே சென்று அமர்ந்து கொண்டன. ‘அப்பாடா’’ என்றிருந்தது எனக்கு. தரையிலமர்ந்து கொண்டிருந்த நான் , கொஞ்சம் தலையைச்சாய்த்து, கன்னத்தை தரையில் வைத்துக்கொண்டு அந்தப்பெட்டியின் வாசல் வழியாக உள்ளே பார்த்தேன். குடும்பம் ஏகக்குஷியில் இருந்தது மனதிற்கு இதமாக இருந்தது.இனி மழை பெய்தாலும் கவலையில்லை.


அவ்வப்போது பூனைக்குப் பால் வைப்பதும் , அந்தக்குட்டிகளின் சேட்டைகளை ரசிப்பதும் தொடர்ந்து கொண்டிருந்தது. அந்தக்குட்டிகளுக்கு கொட்டாங்குச்சியில் வைக்கப்பட்டிருந்த பாலை நக்கிக்குடிக்க இன்னமும் தெரியவில்லை. தாய்ப்பூனை மட்டுமே குடித்துக்காலி செய்து வந்தது. பாலூற்றப்போகும்போது , குட்டிகளை கை கொண்டு விலக்கும்போது , தாய்ப்பூனை தனது முன்னங்காலை தன் கழுத்தளவு உயர்த்தி உயர்த்திக் காண்பிக்கும், பின்னர்தான் புரிந்தது என் குட்டிகளை ஒன்றும் செய்யாதே, உன் நண்பன் நான் என்ற அறிவிப்பு என்று. சில நாட்கள் அப்படி செய்து காட்டிய அது , பிறகு என்னால் அதன் குட்டிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று உணர்ந்தபின்னர் அப்படிக் காலைத்தூக்கிக் காட்டுவதை நிறுத்திக்கொண்டது. பழகிப்போய்விட்டது அதற்கும் எனக்கும் .
 
பால் ஊற்றுவதற்காகப் பால்கனிக்கதவை எப்போது திறந்தாலும் குட்டிகள் அந்த இடுக்கின் வழி என் அறைக்குள் வந்து விடவே எத்தனிக்கும். தாய்ப்பூனையும் கூடவே வந்தே விடும். உள்ளே யூபிஎஸ், பேட்டரி, இன்னபிற எலக்ட்ரிக் வஸ்ததுகள் இருப்பதால் எனக்கு எப்போதும் பயம். குட்டிகள் நேரே அந்த யூபிஎஸ் டப்பாவுக்கும் தரைக்கும் கீழேயுள்ள இடைவெளியில் சென்று அமர்ந்து கொள்ளும்.வெளியே எடுப்பதற்குள் எனக்குப் போதும் போதுமென்றாகிவிடும். தாய்ப்பூனையை போக்குக்காட்டி பாலைக்குடிக்க வைப்பதற்குள் சில குட்டிகள் கிடைக்கும் வயரை தம் பற்கள் கொண்டு கடிக்க எத்தனிக்கும். அதன் வாயிலிருந்து ஒயரை பெரும் சிரமத்துடனேயே எடுத்து எடுத்துவிடுவேன்.


ஒரு வழியாக தாய்ப்பூனை பால் குடித்து முடித்தவுடன் பால்கனிக்கதவை சாத்திவிடுவதே சாலச்சிறந்தது. எல்லாக் குட்டிகளையும் கைகளால் தூக்கி ( இப்போதெல்லாம் தாய்ப்பூனை என்னைக் கண்டு கொள்வதேயில்லை. கால் தூக்கிக்காட்டுவதோ இல்லை. குரலெழுப்பவோ முயற்சிப்பதில்லை ) வெளியே கொண்டுபோய் விடுவதற்குள் , முன்னர் வெளியே விட்ட குட்டி என் காலைச் சுற்றிக்கொண்டு பின்னரும் அறைக்குள் வந்துவிடும். எப்படியும் கால் மணி நேரமாவது ஆகிவிடும் அவை அனைத்தையும் வெளியேற்றி கதவைச் சார்த்திவிட. பின்னர் உள்ளேயிருந்து கண்ணாடி வழியே வெளியே எண்ணிப்பார்த்து ஆறு வெளியே உலாத்துகிறது என்று பார்த்த பிறகே எனக்கு நிம்மதியாக இருக்கும்,
 
வெறும்பாலை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறோமேன்னு நினைச்சு, மால்’ல எதாச்சும் பூனை உணவு கிடைக்குமான்னு நாளைக்குப் பார்க்காலாம்னு நினைத்துக்கொண்டேன். மல்லு பஜார்ல ( மலையாளி’ நடத்தும் மஹா பஜார் , அதான் மல்லு பஜார் ), ‘Cat Food எந்தெங்கிலும் கிட்டுவோன்னு , உண்டல்லோன்னு அவர் பறஞ்சு, ஒரு Cat Food Packet ஐ எடுத்துக்காட்டினார், எதோ கொரியன் பாக்ஸ் அது(இதுவும் கொரியாலருந்து தான் வரணுமா ? ) , விலை Rs 145/- ன்னு போட்ருந்தது. அடப்போங்கடா ,நானே ஒரு வேளைக்கு Rs 145/-க்கு சாப்டறதில்ல, இதுல பூனைக்கி வேறயான்னு நினைத்துக்கொண்டு , ‘சேட்டா வேறேந்திங்கிலும் ப்ராண்ட் உண்டோன்னு, இல்லா, இது ஒன்னு மாத்றமேயுள்ளு, நல்லதாணு இது, எல்லாவரும் இதுதன்ன வாங்குகயாணு " என்றார். ‘இல்லா வேறெந்தெங்கிலும் சீப் ஃபுட் உண்டோன்னு"’ "சீப் அங்ஙன ஒண்ணும் கிட்டுல்லா, வேணங்கி மீனு கொடுத்து நோக்கு, பாசகம் ஒண்ணும் செய்யேண்டா, மாசால ஏதும் இடாதே வெறுதே அங்ஙனே கொடுத்தா மதி, நன்னாயிட்டு உண்டுகோளும்" என்று சொந்த அனுபவத்தில் பரஞ்சார் சேட்டன். "நாங்க வீட்ல மீன் சாப்டறதில்லையேன்னு" சொன்னேன் "அங்ஙன பறா" என்று கூறிச்சிரித்தார் சேட்டன். ஹ்ம், இப்ப அதுவும் போச்சு, அதே தண்ணிப்பால்தான் உனக்கு என்று நினைத்துக்கொண்டேன். இருந்தாலும் அவ்வப்போது நான் சாப்பிடும் தோசை, இட்லி வகையறாக்களை போட்டு வந்தேன். முதலில் முகம் சுளித்தாலும் பின்னர் பாலில் கலந்து கொடுத்தபின்னர் குட்டிகளுடன் சேர்ந்து உண்ணத் தொடங்கிவிட்டது.


 அவ்வப்போது பெய்யும் சிறு மழையில் அந்தக்குட்டிகள் நனைந்து கொண்டு , தம் சிறு உடம்பைச் சிலிர்த்துக்கொள்ளும் , காணக்கண்கோடி வேணும் அதற்கு. இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு தண்ணிப்பாலிலுமாக வளர்ந்து வந்தன. எப்படா பால்கனிக் கதவைத் திறப்பான் உள்ளே வந்து விளையாடலாம்னு காத்துக்கிடக்கும் அவை. சன்னல் கதவின் கொண்டியை சடார் சடாரென அடித்து விளையாடிக்கொண்டிருக்கும் அவை வெளியில். ஒண்ணு மேல ஒண்ணு படுத்துப்புரள்வதும் , காதைக் கடித்துக்கொண்டு இழுப்பதுமாக ஏகக்குஷியில் ஆடிக்கொண்டிருக்கும். அடர்மழையென்றால் அவற்றை வெளியில் காணக் கிடைக்காது , அட்டைப்பெட்டிக்குள் சென்று தஞ்சமடைந்துவிடும்.
 
கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கும் மேலாகிவிட்டது, அவை பால் குடிப்பதும் கொட்டிக் கவிழ்ப்பதுமாக, கொஞ்சம் நாற்றம் அடிக்கத்தொடங்கியது , சுத்தம் செய்யாது பல நாட்களாக அப்படியே கிடந்த பால்கனி , இப்போது புதிதாக பூனைக்குடும்பம் வேறு குடிபுகுந்து , அவற்றின் எச்சங்களும் , பால் கறையுமாகச்சேர்ந்து கொண்டு நெடி அடிக்கத்தொடங்கியது. இந்த அழகில மீனை வேறு கொண்டு வந்து அதற்குக்கொடுத்தால் . இருந்தாலும் அன்னிக்கு ராத்திரிலருந்து ஏகத்துக்கு முடை நாற்றம் அடிக்கத்தொடங்கியது.அறைக்கதவை மூடி வைத்து உறங்கி எழுந்தேன். பின்னர் பால்கனிக்கதவைக் காலையில் எழுந்து பார்த்தால் , அங்கே ஒரு பெரிய பெருச்சாளியை அடித்துக்கொண்டு வந்து போட்டிருந்தது அந்தத் தாய்ப்பூனை. குட்டிகளும் தம்மாலியன்ற வரை அதைத் தின்ன முயன்று கொண்டிருந்தன. அதான் முடை நாற்றம். படாரென கதவைச் சார்த்தி விட்டேன். என்னதான் பாலும் தோசையும் குடுத்தாலும் கடைசியில் பூனை அது புத்தியைக் காட்டிருச்சேன்னு நினைத்து மாய்ந்துபோனேன். அதோட ஜீன்ல இருக்கிற சங்கதி , பத்து நாள் பால்லயும் , தோசைலயும் மாறி விடுமா என்ன ?


இப்ப எப்டி க்ளீன் பண்றது இத ? ஹ்ம்.சரி வாட்ச்மேன் கிட்ட கேட்டுப்பாக்கலாம்னு நினைச்சு ‘தேப் சிங், ஏக் பில்லினே பச்சா பைதா கர்க்கே பூரா கச்சரா கர்தியா , தோடா சாஃப் கர்னேக்கா"( ஒரு பூனை குட்டியப்போட்டுவெச்சு பூரா குப்பையா ஆக்கி வெச்சிருக்கு, க்ளீன் பண்ணணும்) , ‘சாப் உஸ்கோ டச் கரேகாத்தோ காட்டேகா சாப் ,சுபஹ் கரேகா சாப், அபி மந்திர் ஜானேகா" ( சார், அததொட்டா கடிக்க வரும் சார், இப்ப நான் கோயிலுக்கு போறேன் , காலைல பண்றேன் சார் ) . "நஹி அபி கர்னா படேகா" (‘இல்ல இப்பவே பண்ணனும்)’ , டீக் ஹை சாப் , ‘இஸ்கோ பேஜ்தாஹூம் , இஹ் கரேகா’ ( சரி , இவன அனுப்பறேன் , இவன் பண்ணுவான் ) , கூடவே வந்தான் அவன். அறைக்கதவைத் தாழிட்டுக்கொண்டு , பால்கனிக்கதவைத்திறந்தேன். நாற்றம் எங்கேயென்று மூக்கில் அறைந்தது. "சாப் ஏஹ் டப்பா ஃபேக் தூம்" (சார் இந்த டப்பாவை தூக்கிப்போட்றவா -அந்தப்பூனை வீடு ) , சரி வேற வழியில்ல, "ஃபேக் தோ" (தூக்கிப்போடு) என்றேன். அதற்குள் குட்டிகள் என் அறைக்குள் வந்து விட்டிருந்தன. பெருச்சாளியைக் கீறித்தின்ற கால்களுடனும் ,மூக்குடனும் , அவன் கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தை துப்புரவாக்குவதை ஜன்னல் கம்பிகளில் ஏறி நின்று கொண்டே பார்த்துக்கொண்டிருந்தது அந்தத்தாய்ப்பூனை. என்னைப்பார்க்கவே அஞ்சிக்கொண்டிருந்தது போலிருந்தது எனக்கு. பிறகு தண்ணீர் ஊற்றிக்கழுவிட்டு, குட்டிகளை எடுத்து பால்கனிக்குள் கொண்டு போய்விட்டான். ஏற்கனேவே ஈரமாகியிருந்த தரையில் பட்டும் படாமல் நடந்து சென்றன அவை. எல்லாவற்றையும் கொண்டுபோய் விட்டு , பின்னர் பால்கனிக்கதவை சார்த்திவிட்டான்.


பாத்ரூமிற்குள் சென்று கைகால் கழுவிவிட்டு வந்த அவன், "சாப்" என்று தலையைச் சொறிந்தான். பத்து ரூபாயை எடுத்துக்கொடுத்தேன், " சாப் அவுர் தோ சாப்" ( சார் கொஞ்சம் போட்டுக்குடுங்க சார்) , ‘பஸ்ரெ, பாத் மேன் தேத்தா ஹூன்’ (சரிப்பா, பின்னால வாங்கிக்க) , ‘நஹி சாப்’ , என்று முரண்டு பிடித்தவனை ஒரு வழியாக சமாதானப்படுத்தி அனுப்பி விட்டு, வந்தவன் மீண்டும் பால்கனியை மூடியிருந்த கண்ணாடி ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டே இருந்தேன், ஏதும் நடவாத மாதிரியே அவை ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன. சரி, ஏதோ பிரச்சினையை முடிச்சாச்சுன்னு நினைத்துக்கொண்டு அறைக்கதவை இன்று திறந்து வைத்து விட்டு ( இனி நெடியில்லை என்ற நிம்மதியில் ) உறங்கச்சென்றேன்.

காலையில் எழுந்து ஆசுவாசமாக பால்கனியை எட்டிப்பார்த்தால் , இன்னும் இரண்டு புதிய எலிகள் தம் தலையையும் , உடலையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தபடி கிடந்தன பால்கனித்தரையில் . வயிற்றைக்கிழித்து உருவும் சதையை சப்புக்கொட்டிக்கொண்டு குட்டிகள் தின்று கொண்டிருந்தன , பிறகென்ன , வாட்ச்மேனைக் கூப்பிட்டால், தலையைச் சொறிந்து கொண்டு இன்னும் அம்பது ரூபாய் கேட்பானே என்று நினைத்து , வாரியலையும் , ட்ரேயையும் எடுத்துக்கொண்டு நானே க்ளீன் செய்ய ஆரம்பித்தேன்.அப்போதும் ஒன்றும் நடவாத மாதிரி அந்தத் தாய்ப்பூனை ஜன்னல் கம்பிகளில் ஏறி நின்றுகொண்டு என் வேலையை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தது .

எலி, பெருச்சாளி, மற்றும் மீன் தின்னாத மரபணு மாற்றம் செய்யப்பட்ட பூனை கிடைக்க ஏதேனும் வழியிருக்கிறதா ? இருந்தால் கீழுள்ள முகவரியில் எனக்குத் தெரிவிப்பவர்க்கு உடனே H1B Visa கிடைத்து, US போய்ச்சேர்ந்தவுடனே கையோடு கையாக Green Card-ம் கிடைக்க அந்த ஸ்ரீரங்கப்பெருமாள் நிச்சயம் வழியுண்டாக்குவான்


.

 

Saturday, November 24, 2012

முயன்று தோற்கிறேன்




முழு வானவில்லைப் பார்க்க 
முயன்று தோற்கிறேன்

சோம்பல் முறிக்கும் அணிலின்
முதுகைப்பார்க்க முயன்று தோற்கிறேன்


கூவி வரவழைத்த மழையில்
கரைந்து போன அந்தக்

குருவியைப்பார்க்க முயன்று தோற்கிறேன்

சீராகப்பெய்து கொண்டிருந்த மழைச்சாரலை

மெல்லவே கலைக்க முயன்ற
தென்றலைப்பார்க்க முயன்று தோற்கிறேன்


மரங்களினூடே தொடர்ந்து கூவிக்கொண்டிருக்கும்
மைனாவின் இருப்பிடத்தைப்பார்க்க முயன்று தோற்கிறேன்


மழை இல்லாக்காலங்களில் தென்படாத
நத்தைகளைப்பார்க்க முயன்று தோற்கிறேன்


மழை பெய்து முடித்த பின் அதற்கு முந்தைய
நிலப்பரப்பைப்பார்க்க முயன்று தோற்கிறேன்


பல நாட்கள் சகஜமாகப்பழகிய பின்னரும்
என் காதலை அவளிடம்
சொல்ல முயன்று தோற்கிறேன்


இந்தப்பட்டியலில் இன்னமும்
கோர்க்கவியலும் தோல்விகளை
சுவைபடச்சொல்ல இயலாமல்
உங்களிடம் இன்னமும் தோற்கிறேன்.


.