Wednesday, July 27, 2016

மகிழ்ச்சி



இந்தப்படத்துக்கு ஒரு விமர்சனமாவது எழுதலைன்னா விலக்கி வெச்சிருவாங்க போலருக்கு.அந்நிய நிலம்.களம் புதிது. அவ்வப்போது வெளிப்புற காட்சிகளுக்கென சிங்கப்பூர் மலேயா என சென்ற திரைப்படங்களில் அங்குள்ள வணிக மயமான புறத்தோற்றத்தை மட்டுமே அப்படங்கள் பிரதிபலித்தன. தோட்டத் தொழிலாளர்களென அழைத்துச்செல்லப்பட்ட தமிழர்கள் அங்கேயே குறைந்த அடிமாட்டுக்கூலிக்கு அமர்த்தப்பட்டு உழன்றவைகளும், இன்னமும் அந்த அவலங்கள் தொடர்வதும் என இப்படியான செய்திகளைத்தாங்கி எந்தப்படமும் இது வரை வந்ததில்லை. இதுவே முதல்.

பரமக்குடியில் பெரும்பாலான கட்டிடங்கள் கட்டப்பட்டவை மலேயா சம்பாத்தியத்தில் தான். வீட்டுக்கொருவர் என மலேயாவில் இருப்பதும் அங்கு தொழில் செய்வதும் வழக்கம். ( என்ன தொழில் செய்கிறார் என்பது அவர்களுக்கே வெளிச்சம் ) அவர்களின் பிள்ளைகள் சென்ட் வாசனைமிக்க எரேஸர்களைக் கொண்டுவந்து எங்களிடம் பீற்றிக்கொள்வர்.இந்தப்படத்தில் பேசும் சில வார்த்தைகளை அப்போதே அவர்கள் பேசிக்கேட்டிருக்கிறேன்.

எண்பதுகளின் ரஜினியின் தோற்றம் , ஜானி கெட்டப் தான். அத்தனை அழகு! அதுவும் அந்த முடிவெட்டும் கலைஞராக இருப்பவரின் கெட்டப்.அதே முடி கலைத்தல், கூலிங் க்ளாஸ் என. ராதிகா'வைப்பார்த்து சென்யோரீட்டா , ஐ லவ் யூ... :) என்றே பாடுவார் என நினைத்து எதிர்பார்த்து ஏமாந்தேன். தொழிலாளர்களுக்காக அந்த வெள்ளைக்காரனிடம் ஆங்கிலத்தில் குரலுயர்த்திப் பேசும்போது மார்பைத்தட்டி கையை உயர்த்தி எங்கே ஒரு பாட்டும் பாடிவிடுவாரோ என நினைத்து பயந்தும் கொண்டிருந்தேன். நல்லவேளை அப்படி ஒன்றும் நிகழவில்லை. இப்படி ஒரு ரஜினியைப்பார்த்து எத்தனை நாளாயிற்று ?..ஹ்ம்.. ஆங்ரி யங் மேன். 'தீ' காளி' வரிசையில் ஒரு கேரக்டர். இருப்பினும் அந்த கிழ ரஜினியின் கெட்டப் , அப்படியே கே.பாலச்சந்தரின் கெட்டப்தான். இன்னும் கூர்ந்து கவனிங்க கண்டிப்பாக தெரியும். உடல்மொழியும் அதே. தொப்பியும் கண்ணாடியுமாக கெழ போல்ட் பாலச்சந்தர் தான் :)

இங்கும் வணிக சமரசங்கள் இருக்கத்தான் செய்கிறது அத்தனை ஒன்றும் ப்யூராக இல்லை. விரலுயர்த்தும் போது காற்றைக்கிழிக்கும் ஓசை, பின்னணியில் அதிரும் எலக்ட்ரிக் கிட்டார் என. ரஞ்சித்தும் பயன்படுத்தித்தான் இருக்கிறார் என்ன ஒன்று வெளியே அதை அத்தனை தெரியாமல் காட்டியதில் தான் வெற்றி.இதே போல ஏழை பாழைகளுக்காக போராடுவது, கூலி கொடுக்கச்சொல்லி எதிரிகளைப்புரட்டி எடுப்பது எல்லாம் ராஜாதிராஜா, மன்னன் படங்களில் பார்த்தது தான். ஒன்றும் புதிதில்லை. ஆனாலும் பல இடங்களில் அடக்கியே வாசித்திருக்கிறார். எப்பவும் இப்படி இருப்பதில்லையே ரஜினி என்று பல இடங்களில் யோசிக்க வைத்ததே படத்தின் வெற்றி. எப்போதும் வெற்றி பெறுவது , ஒரு காயமுமின்றி தப்பிப்பது, ஒரு குண்டு கூட ரஜினியின்மேல் படாதிருப்பது , சிறு கீறலுமின்றி அத்தனை பேரையும் புரட்டி எடுப்பது ..இப்படி பல "து"க்கள் படத்தில் இல்லை. மேலும் லிப்ஸ்டிக் போடாத ரஜினி :) வழக்கமாக நாயகப்புகழ் பாடுவது ' என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

அவுட்-அன்-அவுட் கேங்ஸ்ட்டர் படம்தான். ஒரு க்ளப் ஸாங் கூட இல்லை.இருப்பினும் பார்ப்பவனை அதைப்பற்றிய பிரக்ஞையே இல்லாதிருக்கச்செய்வதில் ரஞ்சித்தை மெச்சலாம். 'நானும் ரெளடி தான் என்று வடிவேல் கூறிக்கொள்வது போல' என்ற ஒரு வசனம் வருகிறது, 25 ஆண்டுகளாக சிறை வாசமிருந்தவருக்கு எங்கனம் நவீன சினிமா பற்றிய புரிதல் இருந்திருக்கக்கூடும்? ஹ்ம்,,புரியவில்லை. சிறையிலிருந்து வெளிவந்ததும் 'வானத்தைப்பார்த்தேன் பூமியப்பார்த்தேன்' என பாடக்கிளம்பிவிடுவரோ என நினைத்து ஏமாந்தேன். இப்படி பல ஏமாற்றங்கள். நம்மை எல்லோரையும் அப்டி ஆக்கி வெச்சிருக்காங்ய மக்கா. ..ஹிஹி :)

மூன்று சண்டைக்காட்சிகள், சொல்லி அடிக்கின்றன. சிறையிலிருந்து வெளிவந்ததும் கபாலிடா என முடிக்கும் காட்சி, பின்னர் பாண்டிச்சேரியில் அத்தனை பேரையும் புரட்டி எடுக்கும் காட்சி, பின்னர் கடைசி உச்சக்கட்ட சண்டைக்காட்சி என அசத்துகிறார் ரஜினி. எல்லாவற்றையும் அவரே செய்திருப்பார் என்றே நம்புகிறேன் :)

போதை மருந்து பற்றிய பல காட்சிகள் 'உட்தா பஞ்சாபை' ஞாபகப்படுத்துகின்றன. அவை பஞ்சாபிற்கு மட்டுமானதல்ல, உலக முழுமைக்கான பிரச்னை. ரித்விகா ஒரு சிறிய இஞ்செக்ஷனுக்காக மன்றாடுவது, அத்தனை எளிதில் மனம் கலங்கிவிடுவது என அந்தக்காட்சிகள் எல்லாம்.

ராமாயணத்தில் ராமன் சீதையைத்தேடி லங்கா சென்றது போல , ரஜினியும் தம் மனைவியைத்தேடி கடல் தாண்டி பாண்டிச்சேரி வருகிறார். என்ன அசோகவனத்தில் இல்லை ராதிகா அது ஒன்றுதான் வேறுபாடு.தங்கியிருக்கும் அறையைத்தட்டி , கண்டேன் சீதையை என்று சொல்வது போல 'உங்க மனைவி'யைப்பார்த்தேன் என சொல்கிறது ஒரு அனுமான் :) இருப்பினும் கணையாழி ஒன்றும் கொண்டு வந்து கொடுக்கவில்லை அது :) தன்ஷிகா அந்த அனுமனை எப்போதும் சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டிருக்க ரஜினி , அவன் நல்ல பையனாத்தாம்மா தெரியிறானெனக் கூறுவது , அதான்டா எக்ஸ்பீரியன்ஸு :) ஹிஹி.. தொடரும் காட்சிகளில் 'பயமா எனக்கா' எனக்கூறிக்கொண்டே தன்ஷிகா காப்பிக்கோப்பைகளை வைக்கும் போது திடுக்கென ஒலிக்கும் அந்த அழைப்புமணிக்கு 'ஜெர்க்'ஆகும் காட்சியில் சிரிக்கிறார் ரஜினி. நாமும் தான். ' என்னப்பா எதாவது சீடி கீடி எடுத்து நெட்ல விட்டியா' என்ற கேள்விக்கு இல்ல மக்களுக்கு நல்லது பண்ணேன் என்று சிவாஜி சொல்லும் போது' அப்ப உன்னய புடிச்சு உள்ள போட வேண்டியது தான்' என்ற காட்சியில் சிரிப்பது போல அத்தனை இயல்பான சிரிப்புக்காட்சி இங்கும்.

மகிழ்ச்சி' என்ற சொல்லை அந்த டான் லீ சீனன் சொல்லவிழைவது, தகடு தகடு என சத்யராஜ் சொன்னது தான் ஞாபகம் வந்தது எனக்கு. இருப்பினும் அந்த வெளிநாட்டவர்களின் உடல்மொழி நாம் நிறையப்பார்த்துச்சலித்த ஜாக்கி சானின் வில்லன்களின் உடல்மொழிதான்.

ஜெயமோகனைப்போல , அவ்வப்போது தமது ஆற்றாமையை கேரக்டர்களைக்கொண்டு பேசவிட்டு திர்த்துக்கொள்கிறார் ரஞ்சித். இருப்பினும் அவரைப்போல 'நான் சொல்வதைக்கேள்' என்ற பிரச்சார நெடியின்றி இருப்பது இன்னமும் சிறப்பு. இருப்பினும் சாரு'வைப்போல அந்த தமிழரசன் கேரக்டர் எனக்குப்பேரே வரலையே , என்னையக்கண்டுக்கவே மாட்றாங்யளே என்று பொறுமுவது இருக்கத்தான் செய்கிறது. :) 



கேங்ஸ்ட்டர் கதைகளுக்கேயுரித்தான டபுள் கேம்ஸ், போட்டுக்கொடுத்தல், காட்டிக்கொடுத்தல் எல்லாம் படத்தில் இருக்கத்தான் செய்கிறது.எல்லாவற்றையும் கதையோட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முறியடிக்கிறார் நாயகன்.

இந்த மூணு பேர்ல ஒருத்தி தான் உன் மகள் என ஒரு மம்மூட்டியின் படத்தில் சொல்லிவிட்டு இறந்துவிடும் ஒரு கேரக்டர். மம்மூட்டிக்கு அத்தனை அலைபாயும் யாரெனக்கண்டுபிடிப்பதில். இங்கயும் அப்படி ஒரு காட்சி இருக்கிறது ...ஆஹா.. செம சென்ட்டிமென்ட்டா போட்டுத்தாக்கப்போறாரேன்னு எனக்குள்ள உதறல்..ஆனால் அப்படி எல்லாம் இங்கு ஒன்றுமில்லை. நேரேயே சொல்லிவிடுகிறார் ரஞ்சித்.

பாடல்களுக்கு அத்தனை முக்கியத்துவம் இல்லை படத்தில். இருப்பினும் முன்னர் வெளிவந்த கேங்ஸ்ட்டர் படங்கள் எல்லாவற்றிலும் பாடல்கள் பெரும்பங்கு வகித்தன என்பது உண்மை. நெருப்புடா ' உண்மையிலேயே நெருப்புதான்டா. மற்ற பாடல்கள் பின்னில் ஒலிக்கின்றன. சந்தோஷ் நாராயணனுக்கு முதன்முறையாக ஒரு வணிகப்படத்துக்கான வாய்ப்பு. பல இடங்களில் உள்ளேன் ஐயா என வருகைப்பதிவு செய்யத் தவறவில்லை அவர். எண்பதுகளின் இசை , பெர்குஷன்ஸ் வைத்துக்கொண்டு இசைப்பது ஆஹா அப்படியே பிரதிபலிக்கிறது இங்கு, கொஞ்சம் மெட்டாலிக்கா ஸ்டைலில் , அதுவே அவரது பாணியும் கூட. ஹ்ம்..கடைசி அந்த பிறந்தநாள் கொண்டாட்ட காட்சியில் சீன இசை , கேட்க அருமை. ராசைய்யாவின் பாடல்கள் ஒலிக்காத ரஞ்சித் படங்களே இருக்காது போலிருக்கிறது. க்ளப்பில் ராசைய்யாவின் பாடலை ஒரு பாடகி பாடுகிறார். இந்த ரஞ்சித் ஏன் ராசைய்யா கூட சேர்ந்து ஒரு படம் செய்யக்கூடாது ? , ஒரு வேளை கெளதம் மேனனைப்போல அதற்கான தகுதி வரட்டும் எனக்காத்திருக்கிறாரோ என்னவோ ?!. ஹ்ம் :)

இயக்குநர் மிஷ்கின் கேலி செய்வதைப்போல , உச்சக்கட்ட காட்சியில் மலையுச்சியில் நாயகனின் மனைவி மக்களைக்கட்டிப்போட்டு வசனம் பேசும் வில்லன்கள் நல்லவேளை இங்கு இல்லை. :) இருப்பினும் உடுப்பு பற்றிய கேலிக்குப்பதிலடி ரஞ்சித்தினது, அருமை. படத்தில் வன்முறை அதிகம் தான். கேங்ஸ்ட்டர் படங்களில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ? இருப்பினும் பில்லா2 வைப்போல வகைதொகையின்றி அத்தனை குரூரமில்லை.

கொலவெறி'க்குப்பின்னர் மகிழ்ச்சி என்ற சொல்லை பிற மொழிக்காரர்கள் அத்தனை சுலபமாக பேசவைத்ததில் மகிழ்ச்சி ! மேலும் இது வழக்கமான ' ரஜினி' வந்தால் போதும் என எண்ணவைக்கும் படமும் இல்லை என்பது இன்னமும் மகிழ்ச்சி!

 .

Saturday, July 16, 2016

'சித்தன்னவாசலின் ஓவியமே'



கேகே'வின் திருமணத்தையொட்டி திருச்சி வரை செல்ல வேண்டியிருந்தது. கடைசி வரை யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்றே அறியாதிருந்தது.பின்னர் ஒரு வழியாக நானும் செந்திலும் மட்டுமென முடிவானது சென்ற சனிக்கிழமை இரவு பெங்களூரிலிருந்து புறப்பட்டு விடிகாலை திருச்சி வந்தடைந்தோம்.கிளம்பியதே வெகு நேரம் கழித்து தான். ஆகவே சென்றடைந்ததும் அதிகாலை மூன்றரை மணிக்கு. முன்பதிவு செய்து வைத்திருந்த விடுதிக்கு சென்று 209 சாவி வேண்டும் என்று கேட்க எத்தனித்தேன். மூன்று பேரும் நல்ல உறக்கம். கூப்பிட்ட குரலுக்கு யாரும் எழவில்லை.பின்னர் அருகில் சென்று அழைத்ததில் ஒருவர் எழுந்து கொண்டார்.


'கல்யாண சீசனா' அதான் இப்டி..இப்பத்தான் எல்லோரும் படுத்தோம். என்ன நம்பர் சொன்னீங்க என்றார். 209 என்றேன். தூக்க கலக்கம், அவருக்கு இல்லியே காலியில்லியே என்றார். ஹ்ம்..கொஞ்சம் நல்லா பாருங்க..கேகே பதிவு செய்து வைத்திருப்பதாக கூறினார்.என்றேன்..ஆமாமா. டேய் தம்பி போய் ரூமக்காட்டுப்பா என்றார். கிர் கிர் என எரிந்துகொண்டிருந்த ட்யூப் லைட், சுவர்க்கோழி மிச்சம். லிஃப்ட்டுக்காக காத்திருந்த போது செந்தில் சும்மா ஏறலாம் ராம் என்றார். பின்னர் படியேறி சென்று தொப்பென அறையின் படுக்கையில் விழுந்தோம். எதுவும் வேணுமா சார் என்றவனிடம் ..ஹ்ம்..ஒன்றும் வேண்டாம் எனக்கூறிவிட்டு அப்படியே உறங்கிப்போனோம்.

செல்பேசி ஒலித்தது , சிரமப்பட்டு எழுந்து பேசியதில் , கேகே தான்,  ஜிமுருகன்(எழுத்தாளர்)  வர்லியா ராம் என்றார். இல்ல கேகே யாரும் வர்லியே என்றேன்..ஹ்ம்..சரி வந்து கொண்டிருப்பார்கள் என சமாதானப்படுத்திவிட்டு நேரம் பார்த்தென்..எட்டு மணி. சரி இப்ப கிளம்பினாத்தான் சரியாயிருக்கும் என நினைத்து 'செந்தில்' எழுந்திருங்க கிளம்பலாம். கொஞ்சம் தூங்கவிடுப்பா என சால்ஜாப்பு சொல்லாமல் எழுந்து கொண்டார்.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் வரை சென்றோம். சித்தன்னவாசல் எங்கனம் செல்வது என யாருக்கும் தெரியவில்லை. டைம் ஆஃபீஸில் கேட்டபின் புதுக்கோட்டை சென்று பின்னர் இன்னுமொரு உள்ளூர் பேருந்தில் செல்லலாம் என்றார். புதுக்கோட்டை வண்டியில் ஏறி கடைசி சீட்டில் அமர்ந்துகொண்டோம். நமக்கும் இந்த கடைசி பெஞ்சுக்கும் இடைவிடா ஏழு ஜென்மத்தொடர்பு போல...ஹிஹி..கூட அமர்ந்திருந்தவர் பேசிக்கொண்டே வந்தார் . என்ன சார் சாஃட்வேரா என்றார். தெளிவா எப்டி தெரியுதுன்னே தெரியல. எழுதி ஒட்டிருக்கும்போல நம்ம மூஞ்சிகள்ல. என்ன ராத்திரி பஸ் புடிச்சு பெங்களூர்லருந்து வந்திருப்பீங்க , தெரியாதா என்றார். அடப்பாவி எல்லாத்தையும் புட்டு புட்டு வெக்கிறானே. நீங்க விவசாயமா என்றேன்..ஹ்ம்.. ரியல் எஸ்டேட்டு பிஸ்னெஸு என்றார். அதான் இப்பொதைக்கு நடக்குது என்று சலித்துக்கொண்டார். நாற்பன்தைந்து கிலோமீட்டர், ஒன்றரை மணிக்கும் மேலானது தான் ஆச்சரியம்.ஹ்ம்.. சரி அப்புறம் ..இன்னொரு பஸ் பிடிச்சா அது இதுக்கும் மேல. சாலைகளும் சரியில்லை. நிலவில் வண்டி ஒட்டுவது போல ஓட்டினார். இத்தனைக்கும் பதினைந்தே கிலோமீட்டர். ஒரு மணிக்கும் சற்றே குறைவாக சென்றடைந்தது. வாயிலில் இறக்கி விட்டார் ஓட்டுநர்.

உள்ளே நடக்க ஒன்றரை கிலோமீட்டர். அறிவர் கோவிலும் சிற்பங்களும், ஓவியங்களும். சாலையில் யாரையும் காணவில்லை. நல்ல மதிய வேளை. அத்தனை சூரியன் இல்லை. மேக மூட்டம். மெதுவே நடந்துசென்று இடத்தை நெருங்கினோம். கழுத்தில் ஒரு குழாய் போன்று செருகி வைத்துக்கொண்டு அடித்தொண்டையில் பேசினார் (அவ்வப்போது தொட்டுக்கொண்டே ). பதினைந்து ரூபாய் டிக்கெட் சார் ஒரு ஆளுக்கு என்றார். சமணர் படுக்கைகள் பார்ப்பதற்கு, ஓவியங்களுக்கு தனியாக பணம் செலுத்த வேணும் என்றார். மேலே மலையில் இருந்த கைப்பிடிகளைக்காட்டி அது வழி போய் பின்னர் கொஞ்சம் கீழிறங்கினால் சமணர் படுக்கைகளை பார்க்கலாம் என்று இங்கிருந்தே சொன்னார். இரண்டு டிக்கெட் வாங்கி கொண்டு மலையேற முயற்சித்தோம்.


நல்ல காலம் வெய்யிலில்லை. வழியில் சின்டெக்ஸ் டேங்கிலிருந்து கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு ஏறத்தொடங்கினோம்.படிகள் போல செதுக்கி வைத்திருக்கின்றனர், ஆனால் அது படியில்லை. போல மட்டுந்தான். விறுவிறுவென ஏறத்தலைப்பட்டேன். செந்திலும் கூடவே ஏறினார். சிறிது ஆசுவாசப்படுத்திக்கொள்ள கள்ளிச்செடி மரம் போல் வளர்ந்துகிடந்தது. இளைப்பாறினோம். போலாம் செந்தில் என்றேன். கைப்பிடிகள் பிடித்துக்கொண்டு ஏறினோம். அத்தனை கடினமில்லை. பலரும் நடந்து சென்று நல்ல பாதை போல ஆகிவிட்டிருந்தது பாறைகள். எனினும் மழை பெய்தால் வழுக்கத்தான் செய்யும் போல. காலை ஊன்றி நடக்க வேண்டியிருந்தது. களைத்தது கொஞ்சம். பெங்களூரிலிருந்து புறப்பட்டு வந்தது ஒரு கர்நாடகா பேருந்து.மோட்டலில் நிறுத்தினர் இருப்பினும் பயம் எங்கு சொல்லாமல் கொள்ளாமல் எடுத்துக்கொண்டு ஒடிவிடுவானோ என்று இரவில் ஒன்றும் சாப்பிடாது ஒரு நெஸ்கஃபேயொடு முடித்துக்கொண்டது இங்கு தெரிந்தது. அதோடு சரியான உறக்கமுமில்லை. நான்கு மணிக்கு உறங்கி காலை சரியாக 07:57க்கு கேகே வந்தவர்கள் பற்றிய விபரத்திற்கு அலாராம் வைத்து எழுப்பிவிட்டபடியால் .ஹ்ம்... காலை சிறிய சிற்றுண்டி எல்லாம் சமணருக்கே வெளிச்சம். ங்கொய்யால.. ஹ்ம்.. கையில் குடிநீர் போத்தல் என ஒன்றுமில்லை , கைவீசிக்கொண்டு நடக்கணும் என நினைத்து ஒன்றுமே கொண்டுவரவில்லை. எது வேணுமானாலும் மலையிறங்கித்தான் வாங்கவேணும். சமணர் கொஞ்சம் அருள் புரிந்து ஒரு மெக்டொனால்ட்ஸ், இல்லை ஒரு கேஎஃசி'யாவது திறந்து வைத்திருக்க கூடாதா..ஹ்ம்.

சமணர்கள் அந்தக்காலத்தில் வெற்றுக்காலுடன், துளிக்கூட ஆடையின்றி ,வேறு எந்தவித உபகரண உதவியுமின்றி இத்தனை தூரமும் நடந்து மலையேறி வந்து கடுந்தவம் புரிந்தனர். ஹ்ம்.. பாக்கப்போறவாளூம் அப்படியே தான் போகணும்போல. நிறைய புகைப்படங்கள் எடுத்தேன். செம வ்யூ...ஆஹா.. ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு. பின்னர் ஒருவழியாக கைப்பிடிகள் முடியும் நிலையில் கீழிறங்கியது பாதை.மலையின் மறுபுறம் அது.கொஞ்சம் நின்று ஆலோசித்து பின்னர் இறங்கிச்செல்ல முயன்றோம். ஒரு ஆள் மட்டுமே செல்ல முடியும் வழி/பாதை.கைப்பிடி. பின்னர் செங்குத்தாக வழுக்குப்பாறை. வழுக்கினால் பின்னர் அதோகதி தான். கூப்பிட்ட குரலுக்கு வரவும் ஆட்களில்லை.யாருக்கும் குரல் சென்றடையாது.ஆபத்தான பாறைகள். தடுப்புச்சுவர்கள் என ஏதுமில்லை. கம்பிகள் மட்டுமே பிடித்துக்கொண்டுதான் நடந்தாக வேண்டும்.கரணம் தப்பினால் மரணம்..ஹ்ம்...

இறங்கி நடந்தோம். செல்லச்செல்ல இன்னும் குறுகியது பாதை.இடப்புறம் கம்பிக்கிராதிகள் வைத்து யாரும் உள்ளில் சென்றுவிட இயலாத வண்ணம் சமணர் படுக்கைகள் காணக்கிடைத்தன. எனக்கென்னவோ சமணர்களை கழுவேற்றிய கூர் வேல்கள் போலத்தான் தோன்றியது. அதை எண்ணித்தான் அமைத்தனரோ என்னவோ தெரியவில்லை. பதினேழு படுக்கைகள். பாறைகளில் சிறிதே செதுக்கி வைத்த படுக்கை போன்ற பாறை. அவ்வளவே. இதில் தான் படுத்து உறங்கி வாழ்ந்து சமணம் பரப்பினர். அந்தப்படுக்கைகளிலும் உளி  வைத்து அக்கால மொழியில் செதுக்கியிருந்தது. வாசிக்கத்தான் இயலவில்லை. கூடவே ஆங்கிலத்திலும் தமிழிலுமாக 'மணிமாறன் லவ்ஸ் வித்யா' 'அஸ்வின் லவ்ஸ் புனிதா' என காணக்கிடைக்காத வாக்கியங்களும், ஆர்ட்டின்களுமாக கண்டு பூரித்தேன். 


இந்தியர்களைப்போல புராதன சின்னங்களைப் பாதுகாப்போர் யாருமில்லை. ஹ்ம், என்று திருந்தும் இந்நாடு ?. உள்ளே சென்று இப்படி எழுதி வைக்கின்றனர் எனக்கருதி கம்பிக்கிராதிகளில் கூர் வேல் போல அமைப்பில் பாதுகாத்தும் அக்கூர் வேல்களை வளைத்து நிமிர்த்தி கூர் மழுங்கடித்து உள்ளில் செல்கின்றனர். பின்னர் இன்னபிற வஸ்துக்களையும் காண முடிந்தது உள்ளில். சுராபான போத்தல்களும் ,தடுப்பு உறைகளும்,, ஆஹா...!  நவீன எழுத்துகளை முடிந்தவரை அழிக்க முற்பட்டிருப்பது தெரிந்தது. பாறை என்பதால் உளி கொண்டு செதுக்கி வைத்தும் கெடுத்திருக்கின்றனர் இக்கால முனிவர்கள் ...ஹாஹா..

சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து விட்டு சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு பின்னரும் அந்த அபாயப்பாதை வழியாகவே வந்தோம். திரும்பி வரும் வழியில் இளம் காதல் ஜோடி ஒன்று வந்துகொண்டிருந்தது. நான் சுற்றியிருக்கும் காட்சிகளை புகைப்படம் எடுப்பதெற்கென முயற்சி செய்துகொண்டிருப்பதை பார்த்துவிட்டு அந்தப்பெண் முகத்தை துப்பட்டாவில் மூடிக்கொண்டே சென்றார் என்னைக்கடந்து செல்லும் வரை. காலமெல்லாம் காதல் வாழ்க..!

இறங்குவது எளிதாகத்தான் இருந்தது.இறங்கிவந்தபோது அந்த "தொண்டைக்குழி பைப்" டிக்கட் விற்பவரைக்காணவில்லை. பின்னரும் அந்த டேங்கில் இருந்து தண்ணீர் குடித்துவிட்டு நடந்தோம். ஏறிக்கடந்த முழு மலையையும் சாலையில் நடந்து கடக்கவேண்டியிருந்தது ஓவியங்கள் பார்வையிடுவதற்கு. வழியில் சில மகளிர்  உதவிக்குழுக்களின் சின்ன பெட்டிக்கடைகளும் குளிர்பானங்களும் மட்டுமே கிடைக்கின்றன. நல்ல சாலை. நடப்பதற்கும் வண்டி ஓட்டிச்செல்லவும் எங்கெங்கினாதபடி காதலர்களும் , பின்னர் நம் மூதாதையர்களும். கையிலிருப்பதை தட்டிப்பறிக்கவே நினைக்கும் குரங்குகள்.அறிவர் ஆலயத்துக்கு செல்லவும் சிறிது ஏறத்தான் வேண்டியிருக்கிறது. வெளியில் ஒரு அறிவிப்புப்பலகை.கிமு 2-3 ஆம் நூற்றாண்டுகளில் குடையப்பட்டு 9-10 ஆம் நூற்றாண்டு மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டது என.

செருப்புகளை கழற்றி வைத்துவிட்டு வாருங்க என்றார் அவர். கையிடுக்கில் ஒரு சிறிய தோலாலான பை.வாங்கும் பணத்தை அதில் போட்டு வைத்துக்கொள்கிறார். டிக்கெட் என ஏதுமில்லை கொடுக்கவில்லை நானும் வாங்கவில்லை. பதினைந்து ரூபாய் என சில்லறையாகக்கொடுத்தேன் வாங்கி உள்ளே போட்டுக்கொண்டார். எனினும் அந்த தொண்டைக்குழி பைப்காரர் டிக்கெட் கொடுத்தார். அத்தனை பேரையும் உள்ளே விடவில்லை. கொஞ்சம் பொறுங்க என நிறுத்திவைத்துவிட்டார் எனை. உள்ளே இருப்பவ்ர் வரட்டும் பின்னர் செல்லலாம் என. ஒரே ஒரு கோவில். ஒரு சுற்று கூட இல்லை. அவ்வளவே. வெளியில் அஜந்த எல்லோரா ஓவியங்களின் பாணியில் என அறிவிப்புகள் வேறு. எனது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது, உள்ளிருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்தது. எனை உள்ளெ அனுமதித்தார் அந்த டிக்கெட்டே கொடுக்காதவர்.

நான்கு தூண்கள் அதிலும் வேலை நடந்து கொண்டு இருக்கிறது. கம்பி கட்டி.மெதுவாகத்தான் அடியெடுத்து வைக்க வேண்டியிருக்கிறது. மேலே பாருங்க தம்பி என்று இன்னுமொருவர் குச்சி வைத்துக்கொண்டு சுட்டிக்காட்டினார். ஒன்றும் விளங்கவேயில்லை எனக்கு. அத்தனையும் ஓவியங்கள் தான். கிமு1ஆம் நூற்றாண்டு ஓவியம்.கருமை படிந்து காணப்பட்டது, ஒவ்வொன்றாக சுட்டிக்காட்டி அவர் சொல்லச்சொல்ல விளங்கிக்கொள்ள முடிந்தது.


தாமரைக்குளம், அதில் பூப்பறிக்கும் சமணர், அன்னப்பறவைகள், குளக்கரையின் சுவர்களில் வேலைப்பாடுகள் என ஒவ்வொன்றாக சொன்னார். ஆஹா.. என்ன ஒன்று அத்தனை கருமை படிந்து கூர்ந்து கவனித்தால் விளங்கிக்கொள்ள முடிகிறது.வலது புறம் ஜைனர் தீர்த்தங்கரர்களின் குடைவரை சிற்பம், நான்கு ஆள் உயரத்துக்கு உட்கார்ந்த உருவம், தொட்டுப்பார்க்கலாம் கற்சிற்பத்தை மட்டும் , ஓவியங்களை அல்ல. இருப்பினும் பல இடங்களில் காரை பெயர்ந்து ஒவியம் முழுமை பெறாதது போல. புகைப்படம் எடுக்காதீங்க என மென்மையாகச்சொன்னார். பின்னர் மூன்று தீர்த்தங்கரர்களின் குடைவர சிற்பங்கள் கருவறையில். புடைப்புச்சிற்பங்கள் , தொட்டுப்பார்க்க முடிந்தது. அறையில் துளிக்கூட வெளிச்சம் இல்லை. செல்ஃபோனின் டார்ச் லைட்டை ஆன் செய்து பார்த்தேன். கிட்டத்தட்ட மூன்றாயிரம் ஆண்டுப்பழமையான சிற்பம். சில இடங்களில் மூளியாக இருப்பினும் உருவம் இன்னும் சிதையாமல் அப்படியே உள்ளது. வெளியிலிருந்தவர் குரல் கொடுத்துக்கொண்டே இருந்தார். தம்பி சீக்கிரம் வாங்க இன்னும் பல பேர் காத்திருக்காங்க என்றார். பின்னர் வெளியே வந்து ஓவியங்களை இன்னுமொருமுறை பார்வையிட்டேன். இவ்வளவுதானா என்றவனை நோக்கி 'நீங்க மட்டுமில்ல எல்லோரும் இப்டித்தான் சொல்வாங்க, இதையும் பாதுகாத்து வைத்திருக்கிறோமே' என்றார். பெருமைதான்.

ஒரே ஒரு கோவில். நான்கு சுவர்கள். கொஞ்சமே ஓவியங்கள் , அவையும் கருமை படிந்து விளக்கிச்சொன்னபின்னரே விளங்கும் படியானவை என ஏகத்துக்கு எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கிவிட்டன எனை.

'சித்தன்னவாசலின் ஓவியமே' என்று பாடல் எனக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது சிறிது ஏமாற்றமாக இருப்பினும். வியர்த்து ஊற்றியது எனக்கு. வெளியில் வந்தால் போதும் என்றாகிவிட்டது. வெளியில் வந்து காத்துக்கொண்டு இருந்தேன். செந்தில் உள்ளேயே நின்று கொண்டு இருந்தார். ராம் எனக்குரல்.. என்ன செந்தில் என்றேன் உள்ள வாங்க என்றார். இல்ல செந்தில் நான் பார்த்துட்டேன் எல்லாம் , வாங்க போலாம் என்று ஏமாற்றம் தொனிக்கும் குரலில் சொன்னேன். இல்ல வாங்க என்றார் விடப்பிடியாக. சரி உள்ளெ போய் பார்க்கலாம் என்று சென்றேன். உள்ளே அறிவர் கருவறையில் மேற்சுவரில் ஒரு தாமரை போன்ற புடைப்புச்சிற்பம். அதன் நேர்கீழே நடுவில் நின்று கொண்டு 'ஓம்' என்று சொல்லுங்களேன் என்றார் 'ஓம்' என்றேன். அதிர்ந்து அதிர்ந்து தீரவேயில்லை.அத்தனை எதிரொலி தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது உடல் சிலிர்க்கிறது எனக்கு.ஆஹா.. இருப்பினும் அந்த இடத்தை விட்டு சிறிது நகர்ந்து நின்று சொன்ன போதிலும் அந்த எதிரொலி இல்லவே இல்லை. ஆச்சரியம். பின்னரும் நடுவில் நகர்ந்து நின்று கொண்டு பின்னரும் ஓம் என்றேன்.அத்தனை சிலிர்ப்பு. நல்லவேளை அனுபவம் கிடைக்காது போயிருக்கும் எனக்கு.. ஆஹா இப்போது நினைத்தாலும் அந்த எதிரொலி எனக்குள் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது.

பின்னர் அதை முழுவதுமாக அனுபவித்துவிட்டு வெளியெ வந்த போது அத்தனை ஓவியங்களின் புகைப்படங்களையும் செல்லில் எடுத்ததை காண்பித்தார். புகைப்படம் எடுக்கக்கூடாது என்றாரே , அதெல்லாம் அப்டித்தான் இன்னுமொரு இருபது கொடுத்தேன் . புகைப்படத்திற்கு தடையில்லை என சொல்லிவிட்டார் என்றார். இதுதான் டிக்கெட் கொடுக்காததற்கும்  காரணம் போலிருக்கிறது.


சமணம் அழிந்தொழிந்தது கடுமையான சட்டதிட்டங்களும், துறவு வாழ்க்கையும் தான் என அறியக்கிடைத்தது, திரும்பி வரும் வழியில் செல் ஃபோனில் நெட்' ஆன் செய்து பார்த்ததில் ஆஃபீஸ் மெயில்கள் ஏதும் அத்தனை அவசரமாக பதிலுரைக்க வேண்டாதவைகளாக அமைந்துவிட்டதே எனக்கு நிம்மதியாக இருந்தது. நம்ம கவலை நமக்கு...ஹ்ம்.!


 .

Wednesday, July 13, 2016

இன்டிபென்டன்ஸ் டே - ரிசர்ஜன்ஸ்


The Day the Earth Stood Still (1951) என்று ஒரு படம் ஸ்டார் மூவீஸ் செலக்ட்டில் பார்த்தேன்.(பெங்களூரில் இந்தச்சேனலுக்கு ஸ்னானப்ராப்தி கூட இல்லை ) டெல்லியில் அறையில் பொழுது போகாது சேனல் சர்ஃபிங்கில் கிட்டியது 1951-ல் வெளியான படம்.(லேட்டஸ்ட் வெர்ஷனும் உண்டு) அதில் க்ளாட்டூ-(Michael Rennie) ஏலியனாக நடித்திருப்பார். வழக்கம்போல ஒரு சிறுவனுடனேடயே உரையாடல்கள் இருக்கும். இரண்டு டாலர்களுக்கு விலையே கொடுக்கவியலாத வேற்றுக்கிரஹ வைரங்களைக் கொடுப்பார். நானும் வெளிநாடு பயணங்களில் கிடைத்தற்கரியாத நாணயங்களைச்சேகரிப்பது வழக்கம். மீதிச்சில்லறை இல்லாது போனாலும் அப்படியே விட்டுவிடுவது வழக்கம். 

ஒவ்வொரு வசனமும் தெரிந்தெடுத்து பேசுவார் க்ளாட்டூ. மனிதனை வேற்றுக்கிரக பயணங்களுக்கு தயார்ப்படுத்தும் வேலையில்/ ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானியை அவரின் கரும்பலகையில் விடை தெரியாது தவித்துக்கொண்டிருப்பதை உணர்ந்து விடையை யூகிக்கும் வகையில் சில சமன்பாடுகளை எழுதி வைப்பார் க்ளாட்டூ , பிற்பாடு அவர் தம் அறைக்கும் வந்ததும் இன்னார் தான் வந்து சென்றிருப்பார் என க்ளாட்டூ வை அழைத்து வரச்சொல்லி விளக்கம் கேட்பார் அந்த விஞ்ஞானி. இது சரியாகச் செயல்படுவதனால் தான் நான் இங்கு உங்கள் முன்னால் நிற்கிறேன் என இரண்டே வரிகளில் புரியவைப்பார். என்னையுமறியாமல் 'அட' என்றே சொல்லிவிட்டேன் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது. உலகம் முழுதும் க்ளாட்டூவின் பாதுகாவலனான ரோபோவை ஏலியன் என்று நினைத்துக் கொண்டிருக்க அவரோ சிறு பாலகனுடன் உலகைப்புரிந்து கொள்ள முயற்சித்துக்கொண்டிருப்பார் தொடர்ந்தும் விவாதித்து.
 

பறக்கும் தட்டை பார்க்கவேணும் என்ற சிறுவனின் அவாவை பூர்த்தி செய்ய எண்ணி தமது தட்டையே பார்க்க அழைத்துச்செல்வார், நிறைய விஞ்ஞான விளக்கங்களை வழக்கம்போல் விளக்கிக்கொண்டிருக்க , அருகில் வேடிக்கை பார்க்க வந்தவர் கேலி செய்வர் க்ளாட்டூவை.. :) இப்படி பல காட்சிகள் மனதை ஒன்ற வைக்கும். இத்தனைக்கும் கருப்பு வெள்ளைப்படம் தான் அது .இன்றைக்கு போல அத்தனை க்ராஃபிக்ஸ்களோ இல்லை, மயக்க வைக்கும் விண்வெளி டெக்னோ இசையோ இல்லாது அப்படியே நம்பவைக்கும்.

விஞ்ஞானி அனைத்து உலக அறிவியலாளர்களின் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்வார். அந்தத்தட்டின் முன்னாலேயே மேடை அமைத்து, அதற்கு முன் இவர்தான் வேற்றுக்கிரக வாசி என க்ளாட்டூவை தம்மை நம்ப வைக்குமாறு பணிப்பார். ஏனெனில் இவரும் தம்மை ஏமாற்ற வந்த போலியாக இருக்கக்கூடுமென்று கருதி. 

அடுத்த நாள் அச்சிறுவனின் அன்னையுடன் மின்தூக்கியில் பயணிக்கும்போது உலகிலுள்ள அத்தனை மோட்டார்களின் மின்சாரத்தை நிறுத்தி நிரூபிப்பார். எனினும் உலகில் உள்ள அத்தனை பொது நலக்கூடங்கள், மருத்துவமனைகள், உயிர் காக்கும் கருவிகள் அனைத்திற்கும் தடையின்றி இயங்கும் வகையில் தமது ஆற்றலைப்பயன்படுத்தி நிரூபிப்பார். அரை மணி நேரம் அந்த நிறுத்தல் தொடரும் அந்தச்சிறுவன் அத்தனயையும் அன்னையிடம் சொல்லியிருப்பான் ஏற்கனவே. நீ இப்பல்லாம் சரியாகத் தூங்குவதில்லை என அதட்டி கனவை எல்லாம் சொல்லி எங்களை நம்பவைக்காதே என கடிந்து கொள்வர்.
சரியாக 1230 க்கு அத்தனை மோட்டர்களும், தத்தமது மின்கலன்களின் மூலம் இயங்கத் தொடங்கும் வழக்கம்போல. இத்தனையும் அவர் நிருபித்துவிட்டு கூட்டம் நடக்கும் இடம் செல்லும் போது காவலர்களால் அடையாளம் காணப்பட்டு க்ளாட்டூ சுட்டுக் கொல்லப்படுவார்.

அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி ஏவுகணைகளின் மூலம் ஒவ்வொருத்தரையும் கொன்றுகுவிப்பதை நிறுத்தவும், அவற்றை வேற்று கிரக பயணங்களுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தவதை நிறுத்தவும் என உயரிய நோக்கங்களுக்காக க்ளாட்டூ பூமிக்கு வந்திருப்பார். 

கடைசியில் அந்த ரோபோவுக்கு அவர் ஏற்கனவே இட்டிருந்த கட்டளைப்படி க்ளாட்டூ சில சிகிச்சைகளால் உயிர்பிழைக்க வைக்கப்படுவார். பின்னரும் அந்தச்சிறுவனின் அன்னை, இன்னும் எத்தனை நாளைக்கு என வினவும் போது, இறவாத்தன்மை கடவுளின் கையில் என பணிவுடன் கூறி தமது பறக்கும் தட்டை அந்த ரோபோவுடன் மீண்டும் தம் கிரகம் நோக்கி செலுத்துவதோடு படம் முடிவடையும். 

ஏலியன்கள் நமது அதி நவீன தொழில்நுட்பங்களுக்கு உதவி செய்திருப்பதாகவும், மனிதனால் விடைகாணவியலாத முன்னேற்றங்களுக்கு மிகுந்த உதவி செய்திருப்பதாகவும் செய்திகள் நிலவுகின்றன. டிஸ்கவரியில் ஆவணப்படம் ஒன்று வந்திருந்தது. அமேரிக்க அதிபர் ஐஸனோவர் ஏலியன்களுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டு அதன் மூலம் அவர்கள் மனித இனத்திற்கு இன்னமும் தொடர்ந்து எலெக்ட்ரானிக்ஸ்/கம்ப்யூட்டர்/உயர்தர நோய் நீக்கி மருத்துவம் போன்ற துறைகளில். உதவுவதாகவும் செய்திகள் நிலவுகின்றன.
இன்னிக்கும் ஒரு படம் பார்த்தேன், இன்டிபென்டன்ஸ் டே - ரிசர்ஜன்ஸ்.வேணாம் போதும். Watch it on your own Risk !!

Saturday, July 2, 2016

நடந்து சென்று சேகரித்த பூக்கள்


விலக்கு நாட்களில்
சிறுநீர் பிரிவு
உந்தன் நினைவு

—–

திருட்டு முத்தத்தின்
சிலிர்ப்பு
இந்த மழை

—-

உடனுள்ளவரெல்லாம்
காகிதக்கப்பல்
செய்துகொண்டிருக்கும்போது
நான் கத்திக்கப்பல்
செய்துகொண்டிருந்தேன்

—-

இங்கு
முளைக்குமுன்
எந்த
மரமாயிருந்தாய் ?

—–

ஒவ்வொரு குயிலிடமும்
வேறு வேறு
கானங்கள் இல்லை

—–

காடு வரைய
எண்ணும்போதெல்லாம்
பச்சை மையும்
தண்ணீரும் தீர்ந்துவிடுகிறது

—–

இளைத்த நிலவுக்கு
உணவு கொடுக்க வந்த
சூரியன் நான்

----

அரிதாக யாரும்
செல்லும் சாலையில்
நடந்து சென்று சேகரித்த
பூக்கள் இவை

—–

செடி
கொப்பில் இட்ட கையெழுத்து
மலர்

—-

சிறுவயதில்
வண்ணத்துப்பூச்சியின்
இறக்கைகளைப்பிய்த்து எறிந்தவன்
இப்போது அவைகளைப்பற்றி
கவிதை எழுதி
மீளப்பொருத்தி வைக்க எண்ணுகிறேன் ..

—–

பறவைகள்
நகர்த்திக்கொணர்ந்த
மேகங்கள் இவை
பொழிந்தே தீரும்

——

இலையுதிர்காலம்
வழியாகச்செல்கிறேன்
இளந்தளிர்காலம்
வந்தடைய …

—–

ஒரு மழைக்கும்
இன்னொரு மழைக்கும்
இடையேயான வானம்
எனது

------

நிலவை அடையாளமாகக்கொண்டு
வந்து கொண்டிருந்தேன்
உன்னைப்போல அவ்வப்போது
மறைந்துகொள்கிறது



மலைகள் இதழில் வெளியானவை
http://malaigal.com/?p=8357