Friday, January 8, 2016

பாருருவாய



இது என்ன ராகம், எத்தனை நுணுக்கங்கள் எல்லாம் இருக்கின்றன, என்ன பல்லவியோ சரணமோ ஒன்றுமில்லையே, ஹ்ம்.. இடையிசை பற்றிப்பேச ஒன்றுமேயில்லையே ? என அவரின் பிற பாடல்களைப்போல விதந்தோத ஒன்றுமில்லையே என விசனப்பட எத்தனித்தேன். முதலில் இது மாணிக்கவாசகரின் பதிகம் எனத்தெரியாமலேயே..ஹ்ம்.. ‘பிறப்பறுப்பாய் எம் பெருமானே‘ என்றவுடன் விளங்கிற்று. இதை இங்கு பிறந்தவனால் தான் கேட்க இயலும்.

திருவாசகத்திற்கு சிம்ஃபொனி இசையமைக்கும்போது, கூட இசைத்த ஹங்கேரியன் கலைஞர்களுக்கு ராசைய்யா கூறினார்.you are backing a 1000 yr old song from our literature’  இதில் வாசிப்பதற்கு ஒன்றுமில்லையே என இசைக்கலைஞர்கள் விசனப்பட்டனர். வாசிக்க வாசிக்க விளங்க ஆரம்பித்தது இன்னும் முழுதும் வெளிவரவே அவர்களால் இயலவேயில்லை. அதேதான் இங்கும். இன்னொரு சிம்ஃபொனியாக ஆக்கவேண்டாமென நினைத்து நமது இசைக்கருவிகளைக்
கொண்டே இசைத்திருக்கிறார். பாடியவர்களும் தமிழ் தெரிந்து சொற்கள் புரிந்து பாடியுள்ளனர்.

இரண்டே பதிகங்கள்,ஊனுயிர் உருக்கி உள்ளொளி பெருக்கி..ஹ்ம்.. இதற்கு எப்படி விமர்சனம் எழுதுவது? எழுதுகோல் அவன் கொடுத்தது. இனியொரு பிறப்பு இங்கனம் கொடுத்துவிடாதே என கெஞ்சுகிறது முதலில் ஆரம்பிக்கும் வீணை. இஸ்லாமிய நண்பர்கள் வீட்டில் பார்த்திருக்கிறேன். குழந்தை பிறந்தால் அனைவரும் அழுவர்/ வருந்துவர், அல்லா’விடம் இல்லாது நம்மிடம் வந்துவிட்டதே இந்தக்குழந்தை என.

அத்தனை பிற பாடல்களிலும் பறை,தவில்.மத்தளம் என Percussions வைத்துக்கொண்டு இசைத்தது போக , இங்கு உயிர் நரம்புகளலான வீணை கொண்டு இசைத்திருக்கிறார், நாண் பூட்டியது யார்,விடுவிப்பது யார்? முதலில் ஆரம்பம் அபஸ்வரத்தில் தான் ஒலிக்கிறது. பாடல் வாசிக்க ஆரம்பிக்குமுன் நாணேற்றி இளக்கி வாசித்துப்பார்ப்பது வழக்கம். முதலில் பிறந்த குழந்தை அழுவதில்லையா அது போல. ஆனாலும் ‘மாயா மாளவ கௌளை’ என்ற யுனிவர்சல் ராகத்தை வாசித்து உள்ளிழுத்து பின் பாடல் செல்லச்செல்ல நீயும் உன் உடலும் இங்கு இனியும் ஒன்றுமில்லை என ஆக்குகிறார் ராசைய்யா. பாடல் ஓலமாக ஒலிக்கவில்லை எனினும் வருத்தத்தில் தோய்ந்து இழைகிறது.

ஒரே ராகத்தை அத்தனை மனோபாவங்களுக்கெனவும்
(
Pathos , Joy ) வளைத்து நெளித்து சுளித்து என எங்கனமும் பயன்படுத்தலாம். இதே ராகத்தில் நிறையப் பாடல்கள் வந்திருக்கின்றன, குறிப்பிட்டுச் சொல்லும்படியான இன்னொரு பாடல் சத்ரியனில் வரும் ‘மாலையில் யாரோ மனதுடன் பேச’ ‘மாயா மாளவ கௌளை’யின் இன்னொரு பதிப்பு.

இசையென்பது உன்னுள் புகுந்து உன்னையறியாமலேயே உன் இதயத்தை துளைத்து புன்கண்களில் நீர் சொரிய வைக்கவேணும் என்பார் பீத்தோவன்.இங்கு அதுதான் நிகழ்கிறது. அழுதழுது பெற வேண்டும் அன்பு. அழுதழுது பெற வேண்டும் பிறவாமை.எதுவும் அத்தனை எளிதில்லை. இந்த விமர்சனத்துள் சில எழுத்துகள் கரைந்து போயிருக்கக்கூடும். எதனால் ?!

இது போலவே “வேண்டும் வேண்டும்” எனும் இன்னுமொரு பாடல். அம்மா பாடிக்கொண்டே பூசைகள் செய்து கொண்டிருப்பார். வேண்டாம் வேண்டாமெனினும் செவி வழி புகுந்து என் உயிர் வரை சென்று தங்கிய பாடல். திருவருட்பா’விலிருந்து “அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும், ஆருயிற்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும், எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினதருட் புகழை இயம்பிடல் வேண்டும், செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவ மார்க்கம் திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்,தப்பேது நான்செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.”

அழுதழுது ஆரம்பிக்கும் வீணை, பின்னர் இடையிடயே வந்து நானும் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்கிறது. இரண்டேபதிகங்கள், மூன்று முப்பத்துநான்கில் பாடல் ‘சட்’டென முடிந்து விடுகிறது யாரும் எதிர்பாராத போது. இந்த மூன்றையும் ஒருசேரக்கூட்டிப்பார்த்தால் அதுதான் நமது வாழ்க்கை. 

பார் உரு ஆய பிறப்பு அற வேண்டும் பத்திமையும் பெற வேண்டும்
சீர் உரு ஆய சிவபெருமானே செம் கமல மலர் போல
ஆர் உரு ஆய என் ஆர் அமுதே உன் அடியவர் தொகை நடுவே
ஓர் உரு ஆய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண்டருளே


பத்து இலன் ஏனும் பணிந்திலன் ஏனும் உன் உயர்ந்த பைம் கழல் காணப்
பித்து இலன் ஏனும் பிதற்றிலன் ஏனும் பிறப்பு அறுப்பாய் எம்பெருமானே
முத்து அனையானே மணி அனையானே முதல்வனே முறையோ என்
எத்தனையானும் யான் தொடர்ந்து உன்னை இனிப் பிரிந்து ஆற்றேனே