Monday, November 29, 2010

ரகசியங்கள்

 

திண்ணை" யில் வெளியான எனது கவிதை.

எனது ரகசியங்கள்
ஏதும் வெளித்தெரிந்து
விடக்கூடாதென்ற பயம்
எனக்குள் ...ஆதலால்

என் பேச்சைக் குறைக்கிறேன்
செயலில் அதை மற்றவர்கள்
காண இயலாதவாறு
மறைக்கிறேன்

சிலரைத் தெரிந்தும்
தெரியாதது போல்
நடிக்கிறேன்

நைச்சியமாக சிலரின்
கண்களை நோக்கிப்
பேசுவதைத்
தவிர்க்கிறேன்

வழக்கமாக கூடும் இடம்
செல்லும் சாலையைத்
தவிர்த்து சுற்று வழியில்
பயணிக்கிறேன்..

நான் இயல்பில் இல்லாததை
சரியாகக் கண்டு சொன்ன
பல நாள் நண்பனை
சந்தேகிக்கிறேன்

புழுங்கும் மனதுடன்
நடைப்பிணம் போல்
அலைகிறேன்.

கனவுகள் தொல்லையில்
நடு இரவில் விழித்துக்
கொள்கிறேன்

யாருக்கும் சொல்லிக்
கொள்ளாமல்
ஊர் விட்டுச்செல்லவும்
எத்தனிக்கிறேன்.

வேற்றூரிலும் எவரேனும்
கண்டு கொண்டால்
என்ன செய்வது என்று
எண்ணி மருகுகிறேன்.

என்றாலும்
என் ரகசியம்
இன்னொரு உயிர்க்கும்
தெரிந்துதானே
இருக்கிறது.?!



.

Saturday, November 27, 2010

தண்ணீரும் கண்ணீரும்


சம உரிமை
தமிழும் ஆட்சி மொழி
எங்கும் தமிழில் கதைக்கலாம்
படிவங்களை தமிழில் நிரப்பலாம்
அவனும் தமிழ் படிக்கிறான்
பாதைகள் திறந்து விடப்பட்டு
தடையிலா வணிகம் நடக்கிறது.
அத்தனை சோதனைகள்
இப்போது இல்லை.
அதெல்லாம் சரி...
சம உரிமை கிடைத்ததா?
.....ம்.....
உங்களுக்கு காவிரி கிடைத்ததா?



தண்ணீரும் கண்ணீரும்
தண்ணீரில்
எழுத்து
தான்
'விடுதலை'
அவனுக்கு
..
தண்ணீர்
‘விடுதலே’
எழுத்தில்
தான்
இவனுக்கு.
 

.

Tuesday, November 23, 2010

நிகழ்வு




நிகழ்வு

உனக்கும் எனக்கும்
இடையேயான
வாதம் மிக வலுவானது.
எனவே இது
மீண்டும் மீண்டும் வருவது
விவாதத்தைத் தாண்டி
ஒன்றுமே நிகழ்வதில்லை
என்பதையே காட்டுகிறது.
இதனிடையே நாம்
மௌனித்துப் போகும்
கணங்கள் எம் இருவருக்கும்
உவப்பானதாகவே
இருக்கிறது
முடிவு என்ற ஒன்றை
விரும்பாத வரைக்கும்,
தன்னைத் தயார்படுத்திக்
கொள்வதற்கும்.


மொழியும் மௌனமும்

பிற மொழிகளின்
மூலம் தேடி அலைந்த போது
தமிழை வந்தடைந்தேன்
உன் மொழியின்
மூலம் தேடி அலைந்த போது
மௌனத்தை வந்தடைந்தேன்
தமிழுக்கு முன்னால்
வெறும் மௌனம்
தான் இருந்தது போலும்.



.

Saturday, November 20, 2010

முதல் பாடல்




முதல் பாடல்
காலையில் கேட்ட
முதல் பாடல் போல்
நாள் முழுதும்
சுழலும்
உன் நினைவுகள்
என்னுள்.




விளம்பரக் காதல்
'காதலைச் சொல்லிடும்
வழி தங்கம்'
'வாசனை திரவியம்
பூசிக்கொள்,எலிகளென
மொய்ப்பர் காதலிகள்'
'இந்த ஷூவை
அணிந்து கொள்
அடுத்தவன் மனைவியும்
உனக்கு காதலியாவாள்'
'காதலைச் சொல்ல
நெருங்கி வர வேண்டும்'
'நிம்மதியா குளிர்பானம் குடி,
காதலி வருவாள் உனைத்தேடி'
'பேசினால் தான்
காரியம் நடக்கும்'


.